Monday, June 20, 2022

தமிழ், சிங்கள் மத்தியில் ஏற்படும் காதல் தொடர்பான மூன்று ஈழத்து தமிழ் நாவல்கள்

அறிமுகம்

இலங்கையில் பல நூற்றாண்டுகளாக சிங்களவர்களும் தமிழர்களும் வாழ்ந்து வருகின்றனர். இலங்கையின் மக்கள் தொகையில் 75 சதவீதமானோர் சிங்களவர்களாகவும் 16 சத வீதமானோர் தமிழர்களாகவும் காணப்படுகின்றனர்;. இங்கு வாழும் தமிழர்களில் பெரும்பாலானோர் இந்து சமயத்தைப் பின்பற்றும் அதேவேளையில் சிங்களவரில் பெரும்பாலானோர் பௌத்த மதத்தைப் பின்பற்றுகின்றனர். . வேறுபட்ட மொழிகளைப் பேசும் இவ்விரு சாராரின் கலாசாரங்களுக்கிடையே சில ஒற்றுமைகள் காணப்படும் அதேவேளையில் பல தனித்துவங்கள் காணப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது. இலங்கையில் தமிழர்களில் அதிகமானோர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ சிங்களவர்கள் தென் இலங்கையில் பெருமளவில் வாழ்கின்றனர். தமிழர் சிங்களவரிடையே பல கலப்புத் திருமணங்கள் நடைபெற்றாலும் அவை இரு இனத்வரிடையேயும் வரவேற்பைப் பெற்றதாக குறிப்பிட முடியாது. இரு இனத்தினரின் இளைஞர் யுவதிகளிடையே ஏற்படுகின்ற காதல் பல கைகூடாமல் போவதற்கு கலாசார வேறுபாடுகள், இனங்களைப் பற்றிய தவறான புரிதல்கள் …. போன்றன காரணமாக அமைகின்றதெனலாம்.

இலங்கையின் சுதந்திரத்தின் பின்னர் பதவியேற்ற அரசுகள் தமது சுயலாபத்திற்காக தனிச் சிங்களச் சட்டம், பல்கலைக்கழக அனுமதியில் மாவட்ட ரீதியான தரப்படுத்தல் ….. போன்றவற்றை அமுல்படுத்தியதன் விளைவாக காலத்திற்குக் காலம் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையே பிரிவினை தோற்றம் பெற்றது. இரு இனத்தவரிடையே புரிதல் இல்லாமல் ஒருவரையொருவர் சந்தேகக் கண்கொண்டு நோக்கும் நிலையேற்பட்டது. காலத்துக்கு காலம் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளால் தமிழர் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும், சொத்துக்களை இழந்தும் போயினர்.

தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதிகளுக்கெதிராக 1970 களில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தோற்றம் பெற்ற இளைஞர் போராட்டங்கள் காலப்போக்கில் ஆயுதப் போராட்டமாக வளர்ச்சியடைந்து இலங்கையின் சமூக, பொருளாதாரக் காரணிகளில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்போராட்டமானது சிங்கள மக்கள் தமிழ் மக்களை சந்தேகக் கண்கொண்டு நோக்கும் நிலைக்குத் தள்ளியதெனலாம். 1980 இன் பின்னர் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்த பல சிங்கள மக்கள் அங்கிருந்து வெளியேறினர். இவ்வாறே பல்வேறு தேவைகளுக்காக தென்பகுதிகளில் வாழ்ந்த பல தமிழ்க் குடும்பங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சென்று வாழ வேண்டிய நிர்ப்பந்தமேற்பட்டது. இதனால் இக்காலப் பகுதியில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வாழ்நத தமிழ் மக்களுக்கு சிங்கள மக்களுடன் தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பங்களோ, தென்பகுதியில் வாழ்ந்த சிங்களவர்களுக்கு தமிழ் மக்களுடன் தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பங்களோ இல்லாது போயிற்று.

இந்தப் பின்புலத்தில் ஈழத்து இலக்கியத்தில் தமிழ்-சிங்கள உறவுளை மையப்படுதிதய பல படைப்புகள் சிங்கள, தமிழ் மொழிகளில் உருவாகியுள்ளன. அவற்றில் தமிழ்-சிங்கள மக்களுக்கிடையிலான காதலை கருப்பொருளாகக் கையாண்ட படைப்புக்களும் உள்ளன. அந்த தமிழ்-சிங்கள காதலை கருப்பொருளாகக் கொண்ட மூன்று தமிழ் நாவல்களை ஒப்பிடுவதே இந்தக் கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.

மூன்று நாவல்கள்

தமிழ்-சிங்கள இனத்தவருக்கிடையே ஏற்படும் காதலைக் கருவாகக் கொண்ட சில நாவல்கள் தமிழில் உள்ள போதிலும் வசதி கருதி அ. அருள் சுப்பிரமணியத்தின் ‘ அவர்களுக்கு வயது வந்து விட்டது’ ஆ. சாந்தனின் ‘ஒட்டுமா’ இ. செங்கை ஆழியானின் ‘ தீம் தரிகிட தித்தோம்’ ஆகிய மூன்று நாவல்கள் இங்கு ஒப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

அருள் சுப்பிரமணியத்தின் ‘ அவர்களுக்கு வயது வந்து விட்டது’

1945 ஆம் ஆண்டு திருகோணமலையில் பிறந்த சேர்ந்த அருள் சுப்பிரமணியம் அவர்கள் நாவல், சிறுகதை, சிறுவர் இலக்கியமென பல துறைகளில் கால்பதித்தவர். இவரது அவர்களுக்கு வயது வந்துவிட்டது என்ற நாவல் 1973 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மலர் வெளியீடாக பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் முன்னுரையுடன் வெளியானது. இந்த நாவலுக்கு 1974 ஆம் ஆண்டு நாவலுக்கான இலங்கை அரசின் சாகித்திய விருது கிடைத்தது. தமிழில் இருந்து சிங்களத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட முதல் நாவல் இதுவெனக் கூறப்படுகின்றது.

திருகோணமலையைச் சேர்ந்த அரியரத்தினம் தொழில் நிமித்தம் கொழும்பில் சிங்கள வீடொன்றில் அறையெடுத்து தங்குகிறான். அவன் வீட்டு உரிமையாளரின் மகள் மொனிக்காவுடன் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒருமுறை உறவு கொள்கிறான். மொனிக்காவை ஏமாற்றி விட்டு வீட்டில் பேசிய மாற்றுச் சம்பந்த திருமணத்தை செய்ய மனமின்றி; அரியம் தனது வீட்டார்களுக்கு தெரியாமல் மொனிக்காவை பதிவுத் திருமணம் செய்து கொள்கிறான். பின்னர் அவன் சித்திரை வருடப் பிறப்புக்கு தனது மனைவியையும் அழைத்துக் கொண்டு தனது வீட்டுக்குப் போகிறான். அவனது தந்தை முத்தர் இத்திருமணத்தை ஆரம்பத்தில் எதிர்க்கிறார். எனினும் இறுதியில் அவர்களை ஏற்றுக் கொள்கிறார். கலைத்துவத்துடன் இயல்பாக எழுதப்பட்ட இந்த நாவலை பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் “சிங்கள- தமிழ் உறவுகளை சித்தரிப்பது இந்த நாவலின் சிறப்பம்சம்” என முன்னுரையில் குறிப்பிடுகிறார். இந்த நாவலுடன் ஈழத்து நாவல்களுக்கு வயது வந்துவிட்டதென விமர்சகர் கலாநிதி நா. சுப்பிரமணியன் குறிப்பிட்டிருப்பது இந்த நாவலின் தரத்தினை எடுத்துக் காட்டுகின்றது.

சாந்தனின் ‘ஒட்டுமா’

1947 இல் யாழ்ப்பாணம் சுதுமலையில் பிறந்த சாந்தன் தமிழ், ஆங்கில மொழிகளில் பல இலக்கியங்களைப் படைத்துள்ளார். தொழில் நுட்பவியலளாரான இவர் ஆங்கில இலக்கியத்தில் முதுமாணிப் பட்டம் பெற்றவர். தமிழ், ஆங்கிலம் மொழிகளிலான படைப்புகளுக்கு சாகித்திய விருது பெற்ற சாந்தன் இலங்கை அரசின் உயர் இலக்கிய விருதான சாகித்திய ரத்னா, இந்திய சாகித்திய அக்கடமியின் பிரேம சந்த் தகை விருது எனப் பல விருதுகளைப் பெற்றவர். சாந்தனது ஒட்டுமா என்ற நாவல் 1976 ஆம் ஆண்டில் தினகரன் பத்திரிகையில் தொடராக வெளியாகி பின்னர் 1978 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வரதர் வெளியீடாக வெளியானது.

மொறட்டுவ தொழில்நுட்ப நிறுவனத்தில் கற்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் மொறட்டுவப் பகுதியில் உள்ள சிங்களவரான பீரிசின் வீட்டில் தங்கின்றனர். இந்த இளைஞர்களுள் சதா என்னும் இளைஞனுக்கும் வீட்டுக்காரரின் இரண்டாவது மகளான நிலாந்திக்குமிடையே காதல் அரும்புகின்றது. இதனை சதாவின் பெற்றோர் விரும்பவில்லை. சதா சிங்களப் பெண்ணை திருமணம் செய்தால் அவனின் சகோதரிகளுக்கு திருமணம் செய்வதில் பல தடைகள் ஏற்படும் என சதாவின் தந்தை குறிப்பிடுகிறார். இவ்வாறே நிலாந்தியின் பெற்றோரும் இதனை விரும்பவில்லை. ஆனால் சதா, நிலாந்தி ஆகியோர் தமது பெற்றோர் விரும்பாவிட்டாலும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக உறுதியாக உள்ளனர். இந்தத் தருணத்தில் வெளிநாட்டில் கற்றலுக்காக சென்று வதியும் நிலாந்தியின் சகோதரன் அங்குள்ள பெண்ணொருவரை திருமணம் செய்துகொண்ட செய்தி அறிந்து நிலாந்தியின் பெற்றோர் வருந்துகின்றனர். பெற்றோரின் வருத்தத்தை அறிந்த நிலாந்தி தான் தமிழரான சதாவை திருமணம் செய்தால் தனது பெற்றோர் வருந்துவார்கள் என எண்ணுகிறாள். இதனால் தான் சதாவை திருமணம் செய்வதாக இருந்த முடிவை மாற்றிக் கொள்கிறாள்.

இவர்களின் காதல் உடைகின்றது. சிங்கள கிராமப்புறத்தவரின் நல்ல குண அம்சங்கள், அவர்கள் தமிழர்களைப் பற்றிக் கொண்டிருக்கும் அபிப்பிராயம்… என பல விடயங்கள் இந்த நாவலில் கலாபூர்வமாக எடுத்தாளப்பட்டுள்ளன. இந்த நாவலைப் பற்றி திறனாய்வாளர் கே. எஸ். சிவகுமாரன் அவர்கள் “ சிங்கள, தமிழ் உறவுகளை நாசூக்காக ஆராயும் சித்திரம”; எனக் குறிப்பிடுகிறார். மேலும் அவர் “ கலாசாரங்கள் தனித்தவமானவை, செயற்கை ரீதியாக இணைந்து சுவையூட்டினாலும் அவை ஒன்றாகா. சாந்தனின் இக்கருத்து சிங்கள-தமிழ்ப் பிரச்சினையை அணுகும் மற்றொரு பார்வை” எனவும் தொடர்கிறார்.

இந்த நாவலைப் பற்றி கவிஞர் சேரன் ‘சதா நிலாந்தியினுடைய காதலின் கனதிக்கும் இறுதியில் சதாவுக்கு ஏற்படுவதாக சாந்தன் சொல்லும் “ பாரம் கழன்றது போன்ற” உண்ர்வுக்கும் உள்ள முரண் நிலாந்தியின் தந்தை பீரிசின் இயல்புகளின் ஆரம்பத்துக்கும் இறதிக்கும் உள்ள முரண் , தமிழ், சிங்களக் காதல் ஒட்டாது என்ற தொனியில் கருதi;த சொல்கின்ற இந்த நாவல், மிகவும் ஆழமாக விமர்சித்து ஒதுக்கப்பட வேண்டியது’ எனக் குறிப்பிடுகிறார்.

செங்கை ஆழியானின் ‘தீம் தரிகிட தித்தோம்’

கந்தையா குணராசா என்ற இயற்பெயரைக் கொண்ட செங்கை ஆழியான் அவர்கள் 1941 ஆம் யாழ்ப்பாணத்தில் பிறந்தார். இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாகப் பணியாற்றிய இவர் புவியியல் கலாநிதியாவார். ஈழத்தில் முக்கிய இலக்கிய ஆளுமையாகக் கருதப்படும் இவர் பல நாவல்கள், சிறுகதைகள், குறுநாவல்கள் .. என ஈழத்து தமிழிலக்கியத்துக்கு பாரிய பங்களிப்பை வளங்கியுள்ளார். இலங்கை அரசின் அதியுயர் இலக்கிய விருதான சாகித்தய ரத்னா பெற்றவர். நாவல், சிறுகதை என்பவற்றுக்கு பல தடவைகள் சாகித்திய விருது பெற்றுள்ளார்.

செங்கை ஆழியானின் தீம் தரிகிட தித்தோம் என்ற நாவலானது 1986 ஆம் ஆண்டில் அப்போது யாழ்ப்பாணத்தில் வெளியான அமிர்த கங்கை என்னும் சஞ்சிகையில் தொடதாக வெளியாகி பின்னர் 1988 ஆம் ஆண்டு யாழ். இலக்கிய வட்ட வெளியீடாக வெளியானது. 1956 ஆம் ஆண்டு காலப்பகுதியை பின்னணியாகக் கொண்ட இந்த நாவலில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனான சுரேந்திரன் பிரதான கதாபாத்திரமாக அமைகிறான்;. கொழும்பில் தொழில் புரியும் அவனுக்கும் அவனது அலுவலகத்தில் பணியாற்றும் சோமாவுக்கும் இடையில் காதல் அரும்புகிறது. இதனை சோமாவின் குடும்பத்தினர் விரும்பவில்லை.

1956 ஆம் ஆண்டு அமுல்படுத்தப்பட்ட தனிச் சிங்கள சட்டம், அதனை எதிர்த்து காலிமுகத்திடலில் தமிழ் அரசுக் கட்சியினாரால் ஏற்பாடு செய்யப்பட்ட சத்தியாகக் கிரகப்போராட்டத்தினைத் தொடர்ந்து கொழும்பில் தமிழருக்கு எதிரான என்முறை கட்டவிழ்த்து விடப்படுகின்றது. இந்தக் கலவரத்தில் இடுபட்டு தமிழரைத் தாக்கும் சோமாவின் அண்ணனின் கழுத்தை சுரேந்திரனின் அறை நண்பன் தனது தற்பாதுகாப்புக்காக கடிக்கிறான். இதனால் சோமாவின் அண்ணன் இறக்கிறான். அப்பாவியான தனது அண்ணனை தமிழன் கொன்று விட்டதாக சோமா சுரேந்திரனிடம் கூறுகிறாள். அதனை மறுத்து அவளது தமையன் கலவரத்தில் ஈடுபட்டு தமிழரை தாக்கியவன் அவன் அப்பாவியல்லவென சுரேந்திரன் கூற சுரேந்திரன் , சோமா ஆகியோருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அவர்களின் காதல் முறிகிறது.

செங்கை ஆழியானின் இந்த நாவலானது 1956 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் காணப்பட்ட நிலையை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இதில் பாராளுமன்ற உரைகள் அப்படியே உள்ளடக்கியிருப்பது வாசகனை சிரமப்படுத்துகிறது. கலைத்தவமற்று வெறுமனே ஹண்சாட் அறிக்கையை கொண்டு பல பக்கங்களை நிரப்பியள்ளதிந்த நாவலென எழுத்தாளர் அ. யேசுராசா இந்த நாவலைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

ஒப்பீடு

இலங்கை சுதந்திரமடைந்த தசாப்த்தமான 1940 களில் பிறந்த எழுத்தாளர்களான சாந்தன், அருள் சுப்பிரமணியம், செங்கை ஆமியான் ஆகியோரின் நாவல்கள் இங்கு ஒப்பிடப்படுகின்றன. இவற்றில் சாந்தனது ஒட்டுமாவும் அருள் சுப்பிரமணியத்தின் அவர்களுக்கு வயது வந்துவிட்து ஆகிய நாவல்கள் 1970 களில் எழுதப்பட்டிருக்க செங்கை ஆழியானின் தீம்தரிகிட தித்தோம் 1980 களில் எழுதப்பட்டுள்ளது.

அருள் சுப்பிரமணியத்தின் நாவல் 11.04.1972 என்ற திகதியில் ஆரம்பிக்க செங்கை ஆழியானின் நாவல் 01.05.156 இல் ஆரம்பிக்கின்றது. எனினும் சாந்தனின் நாவலில் திகதி குறிப்பிடப்படாவிட்டாலும் கதையின் போக்கிலிருந்து இந்த நாவலின் கதை 1960 களின் இறுதி ஆண்டுகளின் அல்லது 1970 களின் ஆரம்ப ஆண்டுகளில் நடந்ததாக ஊகிக்க முடிகின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த இளைஞர்கள் தமது கல்வி, தொழில் நிமித்தம் கொழும்புக்கு வந்து தங்கி அங்குள்ள சிங்கள யுவதிகளுடன் காதல் வயப்படுவது இந்த மூன்று நாவல்களுக்குமுள்ள பொதுவான ஒற்றுமையெனலாம். அவர்களுக்கு வயது வந்து விட்டது நாவலின் கதா பாத்திரம் கிழக்கிலங்கையை சேர்ந்வராக சித்திரிக்கப்பட மற்றைய நாவல்களின் பாத்திரங்கள் வடக்கை சேர்ந்தவர்களாக அமைகின்றனர்.

செங்கை ஆழியானின் நாவலில் கதாநாயகனும் கதாநாயகியும் ஒரே அலுவலகத்தில் பணியாற்றுவதாக அமைய மற்றைய இரு நாவல்களிலும் பிரதான கதாமாந்தர்கள் சிங்களப் பெண்களின் வீடுகளில் வாடகைக்கு அறையெடுத்து தங்குவாக அமைகின்றது. அருள் சுப்பிரமணியத்தின் கதாநாயகன் அரியரத்தினமும் செங்கை ஆழியானின் நாயகன் சுரேந்திரனும் கல்வித் திணைக்களத்தில் பணிபுரிவதாக வருவது இரண்டு நாவல்களிலுதம் காணப்படும் ஒற்றுமையெனலாம். அருள் சுப்பிரமணியத்தின் நாவலான அவர்களுக்கு வயது வந்து விட்டதில் பிரதான கதா பாத்திரமான அரியம் மொனிக்காவுடன் உறவு கொண்டு பின்னர் அவளை ஏமாற்றாத திருமணம் செய்து தனது வீட்டாரையும் பகைக்காது சேர்ந்து வாழ விரும்புகிறான். சாந்தனின் ஒட்டுமாவில் வரும் பிரதான பாத்திரம் சதா தனது வீட்டாரின் எதிர்ப்பினை கண்டு திகைக்கிறான். பின்னர் என்ன தடைவந்தாலும் நிலாந்தியை திருமணம் செய்ய உறுதி கொள்கிறான்.

அருள் சுப்பிரமணியத்தின் நாவலில் மட்டும் தான் காதல் கலியாணம் வரை செல்கிறது. சாந்தன், செங்கை ஆழியான் ஆகியோரது நாவல்களில் காதல் இடையில் தடைப்படுகின்றது. இக் காதல்கள் சிங்களப் பெண்களால் முறிக்கப்படுவதாக அமைகின்றன. எனினும் சாந்தனின் ஒட்டுமாவில் நிலாந்தி தனது குடுமபத்தின் நன்மை கருதி காதலை முறித்துக் கொள்வதாக சொல்ல, செங்கை ஆழியானின் தீம்தரிகிட தித்தோமில் சோமா தமது தமையன் தமிழரால் கொல்லப்பட்டதால் காதலை முறித்துக் கொள்கிறாள்.

வேறுபட்ட கலாசாரப் பின்னணியைக் கொண்ட இனங்களை சேர்ந்தோர் திருமணம் செய்ய முனையும் போது இருபகுதியாலும் அவை விரும்பப்படுவதில்லை என்பதனை சாந்தனின் நாவலினூடாக வெளிப்பட, தமிழர் தரப்பில் விரும்பப்படவில்லையென அருள் சுப்பிரமணியத்தின் நாவலில் வெளிப்பட, செங்கை ஆழியானின் நாவலில் சிங்கள தரப்பில் எதிர்ப்பு வெளிப்படுவது காட்டப்பட்டுள்ள போதிலும் தமிழர் தரப்பு நிலைப்பாடு கூறப்படவில்லை.

சாந்தனின் நாவலில் யாழ்ப்பாணத்தில் சதாவின் நண்பனொருவன் வேறு சாதிப் பெண்ணொரு வரை திருமணம் செய்த கொள்வதில் உள்ள சிக்கல்கள் எடுத்தரைக்கப்படுகின்றது. அருள் சுப்பிரமணியத்தின் நாவலில் பிரதான கதாபாத்திரமான அரியத்தின் தந்தை முத்தர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரெனவும் அவர் திருகோணமலையைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததனால் அவர் தனது பெற்றோர், சகோதரங்களுடன் தொடர்பில்லாமல் பல்லபண்டுகளாக திருகோணமலையிலேயே வாழ்வதாக வருகின்றது. இவ்வாறு தமிழர்களிடையே உள்ள சாதி, பிரதேச வேற்றுமைகள் தமிழருக்குள்ளேயே காதல் திருமணங்களுக்கு தடையாக அமைவது இவ்விரு நாவல்களிலும் தொட்டுக் காட்டப்பட்டுள்ளன.

அவர்களுக்கு வயது வந்துவிட்டது நாவலில் அரியத்திற்கும் அவனது தங்கைக்கும் மாற்றுச் சம்பந்தமாக தனது மகனையும மகளையும் திருமணம் செய்து வைக்க திருகோணமலையிலுள்ள மனிதரொருவர் விரும்புவதாக அமைய, தீம்தரிகிட தித்தோமிலும் சுரேனுக்கும் அவனது சகோதரிக்கும் மாற்றுச் சம்பந்தமாக திருமணம் செய்வதற்கு யாழ்ப்பாணத்திலுள்ளவர்கள் விரும்புகிறார்கள். இது இவ்விரு நாவல்களிலும் பொதுவானதொரு அம்சமாக காணப்படுகின்றது.

நிறைவுரை

இந்த மூன்று நாவல்களிலும் தமிழ் சிங்களக் காதல் சித்தரிக்கப்படுகின்றன. அருள் சுப்பிரமணியத்தின் நாவலில் மட்டும் திருமணம்; நடை பெறுகிறது. இலங்கையில் வாழும் இரண்டு தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களுக்கிடையிலான காதல் தொடர்பான இந்த நாவல்கள் தனித்துவம் கொண்டனவாக விளங்குகின்றன. ஒரு நாவலின் செல்வாக்கு மற்றைய நாவலில் காணப்படுகின்றதென உறுதியாகக் கூற முடியாவிட்டாலும் இந்த நாவல் ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களுக்கிடையே ஒத்த தன்மை காணப்பட்டிருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது. இம் மூன்று நாவல்களில் சாந்தன், ,அருள் சுப்பிரமணியம், ஆகியோரின் நாவல்கள் கலைத்தவத்தோடு எழுதப்பட்டிருப்பதனால் வாசகளை தொடர்சிசயாக நாவலை வாசிக்க தூண்டகின்றனவெனலாம். மேலும் அருள் சுப்பிரமணியத்தின் நாவலில் இனப் பிளவுகளை விட மானுடநேயம் கூடுதலாக வலியுறுத்தப்பட்டிருப்பது அவதானத்துக்குரியது. இந்த நாவலில் பிரதான கதா பாத்திரத்தின் மனச் சாட்சியின்படி செய்றசெங்கை ஆழியானின் நாவலில் பக்கங்களில் தொடர்ச்சியாக பாராளுமன்ற உரை இடம்பெறுவதை காணப்படுவதை குறைபாடாகவே கருத வேண்டியுள்ளது.

நன்றி ஜீவநதி மே 2022

No comments:

Post a Comment