Sunday, October 10, 2021
மனிதர்களின் மரணத்திற்குப் பின்னர் மற்றவர்கள் நடந்து கொள்ளும் விதங்கள் பற்றிய இரண்டு ஈழத்து தமிழ்ச் சிறுகதைகள்
தமிழில் குறிப்பிடத்தக்க எழுத்தாளராகவும் விமர்சகராகவும் அறியப்படும் க. நா. சுப்பிரமணியன் அவர்கள் சிறுகதையென்பது ஒரு நிகழ்ச்சியாகவோ, உளப்போராட்டமாகவோ அமையலாம் எனக் குறிப்பிடுகிறார். மேலும் பிரபல சிறுகதை எழுத்தாளர் புதுமைப் பித்தன் சிறுகதையென்பது வாழ்வின் சாளரம் எனவும் சிறுகதையானது தொடக்கம், மையச் சம்பவம், அதன் வளர்ச்சி அல்லது வீழ்ச்சி ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டமைந்தது எனவும் குறிப்பிடுகிறார். எனினும் இந்த வரைவிலக்கணங்களுக்கு பொருந்தாத சிறுகதைகளும் காணப்படலாம்.
க. நா. சுப்பிரமணியன் அவர்கள் குறிப்பிடும் ‘சிறுகதையென்பது ஒரு நிகழ்ச்சியாக’ அமையும் பல சிறுகதைகள் ஈழத்தில் காணப்படுகின்றன. அந்த வகையில் ஒருவரின் மரணத்தின் பின்னர் மற்றவர்கள் நடந்து கொள்ளும் விதங்களை தமது கருப்பொருளாகக் கொண்டமைந்த ஈழத்து தமிழ்ச் சிறுகதைகள் சிலவற்றை நோக்குவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.
மனிதர்களின் மரணத்திற்குப் பின்னர் மற்றவர்கள் நடந்து கொள்ளும் விதங்கள் தொடர்பாக சில தமிழ்ச் சிறுகதைகள் ஈழத்தில் காணப்படுகின்றன. தாட்சாயினி, க. சட்டநாதன், தாமரைச்செல்வி, தேவமுகுந்தன், நந்தினி சேவியர், டானியல் அன்ரனி, கலைவாதி கலீல் போன்றோர் இவ்வாறான சிறுகதைகளைப் படைத்துள்ளனர். எனினும் வேறுசிலரும் இவ்வாறான கதைகளை எழுதியிருக்கக் கூடும்.
தாட்சாயினியின் ‘ ஒரு மரணமும் சில மனிதர்களும்’; என்ற சிறுகதையானது பெண் போராளி ஒருவர் இறந்ததன் பின்னர்; பாதுகாப்புக் கெடுபிடிகளால் அவரின் உறவினர்களால் தமது துக்கத்தை அழுகையாக வெளிப்படுத்த முடியாத அவலத்தைச் சித்தரிக்கின்றது. போராளியான தனது பேர்த்தி இறந்ததை அறிந்த வயோதிபமாது இராணுவத்துக்குப் பயந்து தனது அழுகையை கஸ்ரப்பட்டு அடக்க வேண்டிய நிர்ப்பந்தம் நிலவுகின்றது. சில நாட்களில் அயல் வீட்டில் நடைபெறும் வேறொரு மரணச் சடங்கிற்குச் செல்லும் அந்த வயோதிபமாது தனது பேர்த்தியை நினைத்து குழறி அழுகிறாள். இவ்வாறே அந்தப் போராளியின் சிறிய தந்தையும் அயல் வீட்டில் நடைபெறும் மரணச் சடங்கில் தனது பெறாமகளை நினைத்து அழுகிறார். யாழ்பாணத்தில் வெளியாகிய சஞ்சீவிப் பத்திரிகையில் பிரசுரமான இக்கதை 2001 ஆம் ஆண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவரால் தொகுத்து வெளியிடப்பட்ட ‘ மண்ணின் மலர்கள் என்ற தொகுப்பிலும் தாட்சாயினியின் ஒரு மரணமும் சில மனிதர்களும்’ என்ற பெயரில் அமைந்த தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் யாழ்பாண நகரமும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வன்னிப் பிரதேசமும் காணப்பட்ட இருபதாம் நூற்றான்டின் இறுதி தசாப்சத்தின் பின்னரைப் பகுதில் வடபுலத்தின் நிலமையை இச்சிறுகதை கலாபூர்வமாக பிரதிபலிக்கின்றது.
க. சட்டநாதனின் ‘ அந்த மரணமும் அவர்களும் ’; என்ற சிறுகதையானது நோயாளியான தமது மனைவி இறந்தவுடன் மனிதனொருவனின் நடத்தைகளை சித்தரிக்கின்றது. யதார்த்ததிறகு முரணான வகையில் காணப்படும் இக்கதையில் இறந்தவளின் கணவன் மனைவியின் தங்கையுடன் உடலுறவு கொள்வதாக கதை அமைகின்றது. பின்னர் அந்த மனிதன் வேறு பெண்களை தேடிச் செல்கிறான். இறுதியில் மனைவியின் மரணச் சடங்கில்தான் இனித்திருமணம் செய்யவுள்ள பெண்ணுடன் சென்று கலந்து கொள்கிறான். மல்லிகையில் (ஜனவரி, 2006) பிரசுரமான இக்கதையானது பின்னர் வெளியான சட்டநாதனின் சிறுகதைத் தொகுப்பொன்றிலும் இடம் பெற்றுள்ளது.
தாமரைச்செல்வி எழுதிய ‘அழுவதற்கு நேரமில்லை’ என்ற சிறுகதை தினக்குரல் பத்திரிகையில் 1997 இல் பிரசுரமாகி பின்னர் இதே பெயரில் 2002 ஆம் ஆண்டு வெளியான அவரது சிறுகதைத் தொகுப்பில் முதலாவது கதையாக இடம்பெற்றுள்ளது. இராணுவ நடவடிக்கைகள் காரணமாக பரந்தனை வெளியேறி கிளிநொச்சியில் உள்ள ஸ்கந்தபுரம் என்ற கிராமத்தில் குடும்பமொன்று வாழ்கின்றது. நோய், வறுமை என்பன அவர்களை பீடிக்கின்றது. இளம் குடும்பத் தலைவியான வேணி நோயால் முன்னிரவு நேரத்தில் இறக்கிறாள். இறப்புச் செய்தியை உறவினர்களிடம் சொல்லி அனுப்ப வேறு ஆட்கள் இல்லாத நிலையில் குடும்பத்தைலைவனே அதற்குச் செல்கிறான். மரணச் சடங்கினை நடத்துவதற்கு பணத்தினை நண்பனொருனிடம் கேட்டு அவனிடம் இருந்த 1000 பணத்தைக் கொண்டு வீட்டுக்குப் போனபோது தனது மகளுக்கு காய்ச்சல் அதிகமாகி விட, அவளை மருத்துவரிடம் கூட்டிச் சென்று சேலைன் ஏற்றுவிக்கிறான். அதற்கான பணத்தினை மரணச் சடங்கிற்காக கடனாகப் பெற்ற பணத்திலேயே செலுத்துகிறான். மறுநாள் பல சிரமங்களுக்கு மத்தியில் தனது மனைவியின் உடலை தகனம் செய்கிறான். அத்தினத்தில் இடம்பெறும் பாரிய செல்வீச்சுக்களால்; அவனது அயலவர்கள் பலர் இடம்பெயர அவர்களுடன் சேர்ந்து இவனது குடும்பமும் இடம்பெயர்ந்து செல்கின்றது. அகதி வாழ்வின் அவலங்களை இக்கதை படம் பிடித்துக் காட்டுகின்றது.
தேவமுகுந்தன் எழுதிய ‘கண்ணீரினூடே தெரியு; வீதி’ என்ற சிறுகதையானது 2008 ஆம் ஆண்டு தினக்குரல் பத்திரிகையிலும் பின்னர் இதே தலைப்பில் வெளியான அவரது சிறுகதைத் தொகுதியிலும் இடம்பெற்றுள்ளது. கொழும்பின் புறநகர்ப் பகுதியான கல்கிசையில் தங்கியிருக்கும் பல்கலைக்கழக மாணவனான பிரதான பாத்திரத்திற்கு வெளிநாட்டில் வசிக்கும் தந்தை போராளியான சகோதரன் இறந்த செய்தியை தொலைபேசியில் கூறுகிறார். அடுத்த நாள் அவனது வீதியில் நடைபெறவிருக்கும் இராணுவ வீரர்களின் மரணச் சடங்கிற்கு செல்ல வேண்டுமென அழுகையினூடு பிரதான பாத்திரம் எண்ணுகிறது. சிங்களவர், தமிழர் என்ற பேதமின்றி யுத்த அவலம் எல்லோர் மீதும் கவிழ்ந்திருப்பதை எவ்விதப் பாசாங்கும் இன்றி இக்கதை யாதார்த்தமாகச் சொல்கின்றதென இக்கதையைப் பற்றி பேராசியர் நுஃமான் அவர்கள் குறிப்பிடுகிறார்.
நந்தினி சேவியரின் ‘எதிர்வு’ என்ற சிறுகதையானது திருகோணமலையிலிருந்து 2003, 2004 ஆம் ஆண்டுகளில் வெளியான ‘சுட்டும் விழி’ என்ற காலாண்டு சஞ்சிகையில் 2003 ஆம் ஆண்டு முதலில் பிரசுரமாகி பின்னர் அவரது ‘ நெல்லிமரப் பள்ளிக்கூடம்’ என்ற சிறுகதைத் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. தனது மனைவியின் தந்தையின்; இறுதிச் சடங்கினை கத்தோலிக்க மத முறைப்படி நடத்துவதற்கு தாங்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்துவரும் ஊரில் பிரதான பாத்திரம் முயல்கின்றான். இதற்காக அவன் மிகுந்த பிரயத்தனப்பட்டு கருமங்களைச் செய்கின்றான். பிறந்து சில மாதங்களேயான தனது மகனுக்காக வாங்கிய நகையினை விற்று மரண வீட்டுக் கருமங்களுக்காக செலவளிக்கிறான். எனினும் யுத்த மேகம் சூழ்ந்திருந்த இக்கிராமத்திற்கு அருகே விமானக்குண்டுவீச்சு நிகழ்ந்ததால் மரணச் சடங்கை உரிய முறையில் தேவாலயத்தில் நடத்தி இறந்தவரது உடலை சவக்காலையில் அடக்கம் செய்ய முடியாத நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. இதனால் பிரதான பாத்திரம் மரண வீட்டில் எஞ்சியிருந்த மனிதர்களோடு சேர்ந்து மிகுந்த சிரமத்தின் மத்தியில் இறந்த தனது மாமனாரின் உடலை ஊரில் இருந்த சவுக்கு மரக் காட்டுக்குள் அடக்கம் செய்கிறான். பல ஆண்டுகளின் பின்னர்; “ அவன் கொமியூனிஸ்காரன் அதுதான் மாமனைச் சவுக்குமரக் காட்டக்குள்ள தாட்டுப்போட்டான்” என்று தனது உறவுகள் தன்னைப் பற்றிப் பேசிக் கொள்வதாக செய்தி அறிந்த பிரதான பாத்திரம் மனதுக்குள்ளும் வாய்விட்டும் சிரிக்கிறான். யுத்த கால அவலத்தினை இக்கதை சிறப்பாக வெளிப்படுத்துகின்றது.
டானியல் அன்ரனி ‘ஒரு வெறும் மனிதனின் மரணம்’ கலைவாதி கலீல் ‘மையித்துக்கள் துயில்கின்றன’ ஆகிய சிறுகதைகளில் மரணித்தவர்களின் உடல்களை உரிய முறையில் அடக்கம் செய்வதற்கு மத ஸ்தாபனங்களால் ஏற்படுத்தப்படும் தடைகளையும் இத்தடைகளைத் தாண்டி உடல்கள் அடக்கம் செய்யப்படுவதையும் மையமாகக் கொண்டுள்ளன.
இரண்டு சிறுகதைகள்
மனிதர்கள் இறந்ததன் பின்னர் அவர்களது உறவுகள், நண்பர்களின் நடத்தைகள் பற்றிய சில சிறுகதைகளைப் பற்றி மேலே சுருக்கமாகப் பார்த்தோம். எனினும் ஒத்த தன்மையுடைய கதைக்கருக்களை கொண்ட கதைகளான
அ. டானியல் அன்ரனியின் ‘ ஒரு வெறும் மனிதனின் மரணம்’
ஆ. கலைவாதி கலீலின் ‘மையித்துக்கள் துயில்கின்றன’
என்பவற்றை ஒப்பிடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
அ. டானியல் அன்ரனியின் ‘ ஒரு வெறும் மனிதனின் மரணம்’
யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்த டானியல் அன்ரனி தனது 47 வயதில் நோய் காரணமாக மறைந்தார். இவர் தனது சிறுகதைகளைத் தொகுத்து வலை என்ற தொகுதியை வெளியிட்டுள்ளதோடு; எட்டு இதழ்கள்வரை ‘சமர்’ என்ற சிற்றிதழினையும் வெளியிட்டுள்ளார்.
டானியல் அன்ரனியின் ‘ஒரு வெறும் மனிதனின் மரணம்’ என்ற சிறுகதையானது மல்லிகை இதழில் 1982 ஆம் ஆண்டிலும் பின்னர் 1987 இல் வெளியான இவரது ‘வலை’ தொகுதியில் இடம் பெற்றுள்ளது. கத்தோலிக்க மக்கள் வாழும் கடலோரக் கிராமத்தை பின்னணியாக கொண்டமைந்த இக்கதையில் சிறுவனான சின்னவன் பிரதான பாத்திரமாக அமைகின்றான். முன்னர் கடற்தொழில் புரிந்து பின்னர் நோயாளியாக படுத்த படுக்கையில் கிடக்கும் சின்னவனது தந்தை ஒருநாள்; இறந்து விடுகிறார். இறந்தவர் உழைத்தபோது அவரது உழைப்பில் கோவிலுக்கு தீர்வையாக செலுத்த வேண்டிய பணத்தை தினமும் கழித்த சம்மாட்டி தொம்மையார் அதனை கோவிலுக்குச் செலுத்தாதல் மரணச் சடங்கில் தேவாலயப் பங்கு சுவாமி கலந்து செய்ய வேண்டிய காரியங்களைச் செய்ய வரவில்லை. சுவாமி வர மாட்டார் என்ற தகவலை கோவில் சங்கிடுதாம் கூறுகிறார். இதனால் சுவாமி வந்து செய்ய வேண்டிய கருமங்கள் நிறைவேற்றுப்படாமல் இருக்கத்தக்கதாக மரண வீட்டில் நின்ற இளையவர்கள் சடலத்தை அடக்கம் செய்வதற்காக தூக்கிச் செல்கின்றனர்.
ஆ. கலைவாதி கலீலின் ‘மையித்துக்கள் துயில்கின்றன’
மன்னாரை பிறப்பிடமாகவும் பாணந்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட கலைவாதி கலீல் அவர்கள் எழுத்தாளர், ஓவியர், கவிஞர், ஒலிபரப்பாளர், விமர்சகர், நடிகர் என பல்பரிமாணங் கொண்டவர். இவரால் எழுதப்பட்ட சிறுகதை ‘ மையித்துக்கள் துயில்கின்றன’. யாழ்பாணத்திலிருந்து 1989, 1990 காலப்பகுதியில் வெளியான ‘திசை’ என்ற வாராந்தப் பத்திரிகை 1989 ஆம் நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசினைப் பெற்று அப்பத்திரிகையில் பிரசுரமானது.
இலங்கையின் மன்னார்ப் பிரதேசத்திலுள்ள முஸ்லிம் கிராமமான மன்னார்க்குடியிருப்பைக் களமாகக் கொண்டமைந்த சிறுகதை ‘மையித்துக்கள் துயில்கின்றன’. இக்கதையில் ஷர்மிளா என்ற யுவதி பிரதான பாத்திரமாக அமைகிறாள். தேங்காய்க கடையில் தொழில் புரிந்து கொண்டிருந்த ஷர்மிளாவின் தந்தை சகாப்தீன் திடீரென இறக்கிறார். இஸ்லாமியர்களின் முறைப்படி உடல் சூடு ஆறுவதற்கு முன்னதாக சடலத்தை அடக்கம் செய்வதற்கான அலுவல்கள் நடைபெறுகின்றன. இந்த அலுவல்கள் நிறைவுபெற்று சடலத்தை மையவாடிக்கு கொண்ட செல்வதற்காக தூக்குவதற்கு ஆயத்தமான வேளையில் ஊர் மரைக்காயர் வந்து இறந்தவர் பள்ளிவாசலுக்கு செலுத்த வேண்டிய பணத்தில் பாக்கியுள்ளதாகவும் பாக்கித் தொகையை செலுத்தமல் மையத்தை அடக்கம் செய்ய கொண்டு செல்வது ஊர் வழமைக்கு மாறானது எனக்; குறிப்பிடுகிறார். அதற்கு ஷர்மிளா எதிர்ப்புச் தெரிவித்து வாதாடுகிறாள். ஆனால் மரைக்காயர் மற்றவர்களையும் கூட்டிக் கொண்டு அந்த வீட்டில் இருந்து வெளியேறுகிறார். ஷர்மிளாவும் அவளது சகோதரிகளும் சகோதரர்களும் சேர்ந்து சடலத்தை அடக்கம் செய்வதற்கான மையவாடியை நோக்கித் தூக்கிச் செல்கின்றனர்.
ஒப்பீடு
டானியல் அன்ரனியின் ‘ ஒரு வெறும் மனிதனின் மரணம்’ என்ற சிறுகதை 1982 ஆம் ஆண்டு யூன் மாதம் வெளியான மல்லிகை இதழில் ; முதலிலும் பின்னர் 1987 ஆம் ;வெளியான அவரது சிறுகதைத் தொகுப்பிலும்; பிரசுரமானது. எனவே கலைவாதி கலீலின் ‘மையித்துக்கள் துயில்கின்றன’ என்ற கதையானது டானியல் அன்ரனியின் சிறுகதை பிரசுரிக்கப்பட்டு ஏழு வருடங்களுக்கு பின்னர் பிரசுரமான கதையாகும். இந்த இரண்டு சிறுகதைகளிலும்
1. ஏழை மனிதனொருவனின் மரணம் நிகழ்தல்
2. மதங்கள் மரண வீட்டில் தமது அதிகாரத்தை நிலைநாட்ட முனைதல்
3. மத அதிகாரத்திற்கு எதிர்க் குரலாக இளைய தலைமுறையினர் செயற்பட்டு சடலத்தை அடக்கம் செய்வதற்குப் புறப்படுதல்
4. இறந்தவர்களின் பிள்ளைகள் பிரதான பாத்திரங்களாக சித்தரிக்கப்படடிருத்தல்
போன்ற அம்சங்கள் பொதுவாகக் காணப்பட்டாலும் இந்த இருகதைகளும் தனித்துவமான அம்சங்கள் பலவற்றைக்; கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. டானியல் அன்ரனியின் ‘ ஒரு வெறும் மனிதனின் மரணம்’ என்ற சிறுகதை கத்தோலிக்க மக்களை கதாமாந்தர்களாகக் ; கொண்டமைந்தள்ளது. ஆனால் கலைவாதி கலீலின் ‘மையித்துக்கள் துயில்கின்றன’ என்ற சிறுகதையானது இஸ்லாமிய மக்களை கதாமாந்தர்களாக கொண்டமைந்துள்ளது.
இக்கதைகள் கட்டியெழுப்பப்படும் முறைமைகளில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. டானியல் அன்ரனியின் கதையின் மரணம் கதையின் நடுவில் நிகழ்கிறது. ஆனால் கலீலின் கதையின் ஆரம்பத்திலேயே மரணம் நிகழ்கின்றது.
டானியல் அன்ரனியின் கதையில்வரும் பிரதான பாத்திரமான சிறுவன் சின்னவன் விபரந்தெரியாதவனாக சித்தரிக்கப்படுகிறான். ஆனால் கலைவாதி கலீலின் கதையின் பிரதான பாத்திரம்hன ஷர்மிளா சமூகத்தின் அடக்குமுறைகளுக்கெதிராக நியாயம் கேட்கிறாள்.
டானியல் அன்ரனியின் கதையில் இறந்த மனிதனின் ஊதியத்தில் இருந்து சம்மாட்டியினால் கழிக்கப்பட்ட தொகையானது கோவிலுக்குச் செலுத்தப்படாமல் உள்ளது. ஆனால் கலைவாதி கலீலின் கதையில் இறந்த மனிதன் சகாப்த்தீன் பள்ளிவாசலுக்கு பணத்தை ஒழுங்காக கட்டவில்லை எனவுள்ளது.
டானியல் அந்தனியின் கதையில் பணம் செலுத்தாததால் கோவில் குருவானவர் சின்னவனின் தந்தையின் இறுதிக் கிரிகைகளில் பங்குகொள்ள மாட்டாரென கோவில் சங்கிடுதாம் குறிப்பிடுகிறார். ஆனால் கலைவாதி கலீலின் கதையில் மரைக்காயர் பள்ளிவாசலுக்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தாது சகாப்த்தீனின் சடலத்தை அடக்கம் செய்வது ஊர் வழக்கத்திற்கு பிழை எனவும் பணத்தை கட்டாது விட்டால் அடக்கம் செய்ய முடியாது என்கிறார்.
டானியல் அன்ரனியின் கதையில் குருவானவரை எதிர்பார்க்காமல் ஊரவர்கள் சடலத்தை சுமந்து செல்ல முயல்கிறார்கள். ஆனால் கலைவாதி கலீலின் கதையில் ஊரவர்கள் சடலத்தை தூக்காது விட இறந்தவரின் பிள்ளைகள் அதனை சுமக்க முயல்கின்றனர். அதாவது டானியல் அன்ரனியின் கதையின் சமூகத்தவர்கள் சேர்ந்து மதத்தால் ஏற்படுத்தப்படும் அடக்குமுறைக்கெதிராக செயற்பட கலைவாதி கலீலின் கதையின் இறந்தவரின் மகள் மட்டுமே நியாயம் கேட்டு தனது சகோதரங்களையும் சேர்த்துக் கொண்டு அடக்குமுறைக்கெதிராக செயற்படுகிறாள்.
இந்த இரண்டு சிறுகதைகளிலும் கலைவாதி கலீலின் கதையான மையித்துக்கள் துயில்கின்றவில் காணப்படும் கலைத்தவம், வடிவமைப்பு எனபன டானியல் அந்தனியின் கதையான ஒரு சாதாரண மனிதனின் மரணத்திலும் பார்க்க உயர்வாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
கலைவாதி கலீலின் ‘மையித்துக்கள் துயில்கின்றன’ கதை திசையில் பிரசுரமானதன் பின்னர் வளாக வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம் என்ற முகவரியில் வசித்த இரத்னா. விக்ன. ராஜ் என்பவர் வாசகர் கடிதம் பகுதியில் இக்கதையானது டானியல் அன்ரனியின் ‘ஒரு வெறும் மனிதனின் மரணம்’ என்ற சிறுகதையின் கருவினை ஒத்திருப்பதாகவும் ஒரு கதையில் கிறிஸ்தவம் மற்றைய கதையில் இஸ்லாம் உள்ளதாகவும் குறிபிட்டு இக்கதையினை பரிசுக்குத் தெரிவு செய்த நடுவர் குழுவினரை சாடியிருந்தார். அதற்கு எழுத்தாளர் க. சட்டநாதன், கலாநிதி சித்திரலேகா மௌனகுரு, திசை ஆசிரியர் மு. பொன்னம்பலம் ஆகியோரைக் கொண்டமைந்த நடுவர் குழு அளித்த விளக்கமும் திசையில் பிரசுரமாகியிருந்தது. அந்த விளக்கத்தில், இரண்டு கதைகளுக்கும் ஒத்த கருக்கள் காணப்பட்டாலும் பொதுக்கருத்துக்கள் ஒன்றாக இருக்கும் படைப்புக்களை ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுததுவதில் கட்டமைப்பு, ஆக்கமுறைமை என்பன பிரதான பங்கு வகிப்பதால் இரண்டு கதைகளுக்குமிடையிலான வேறுபாடுகளை கவனத்தில் கொண்டே கலைவாதி கலீலின் ‘மையித்துக்கள் துயில்கின்றன’ என்ற படைப்புக்கு பரிசு வழங்கியதாகக் குறிப்பிட்டிருந்தமை அவதானிக்கத்தக்கது.
நிறைவுரை
டானியல் அன்ரனி, கலைவாதி கலீல் ஆகியோரால் எழுதப்பட்ட இரண்டு சிறுகதைகளிலும் சிறுகதைகளிலும் மதங்களின் அடக்குமுறைகளை தகர்த்து இறுதி அடக்கத்துக்கு செல்லும் நிலை எடுத்தக்காட்டப்;பட்டள்ளது. இனங்கள், மதங்கள் மாறுபட்டிருந்தாலும் மனிதகுலத்திற்கு ஒத்த பிரச்சினைகள் காணப்படுவதை இவ்விரு கதைகளிலும் அவதானிக்க முடிகின்றது.
இவ்விரு சிறுகதைகளினதும் கருப்பொருட்கள் ஏறத்தாள ஒரே போன்று இருப்பினும் இவை எடுத்துரைக்கப்படும் முறைகளில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
முதலாவது கதையின் அருட்டுணர்வால்; இரண்டாவது கதை எழுதப்பட்டதா அல்லது இரண்டு எழுத்தாளர்களுக்கும் ஒத்த அனுபவங்கள் கிடைத்ததன் விளைவாக இரண்டு கதைகளிலும் பல ஒத்த அம்சங்கள் காணப்படுகின்றனவா என்பதை உறுதியாக குறிப்பிட முடியாதுள்ளது.
நன்றி ஜீவநதி (செப்டம்பர் 2021)
Thursday, May 13, 2021
உணவகங்களில் பரிமாறுபவர்கள் தொடர்பான இரண்டு ஈழத்து தமிழ்ச் சிறுகதைகள்
அறிமுகம்
வ. வே.சு. ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரம’; என்ற சிறுகதையே தமிழில் எழுதப்பட்ட முதலாலது சிறுகதை என்று கூறப்படுகின்றது. இச்;சிறுகதை எழுதப்பட்டு ஏறக்குறைய நூறு வருடங்கள் கடந்து விட்டன. இந்த நூறு வருட காலத்தில் சிறுகதைகளின் கரு, வடிவம் என்பவற்றில் பல மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. ஈழத்தைப் பொறுத்தவரையில் இலங்கையர்கோன், சம்பந்தர், வைத்திலிங்கம் என்போர் சிறுகதை மூலவர்களாகக் கொள்ளப்படுகின்றனர். இவர்களால் தொடக்கி வைக்கப்பட்ட ஈழத்து சிறுகதை முயற்சி முன்னேற்றகரமான பாதையில் பயணிக்கின்றதென பொதுவாகக் கூறப்படுகின்றது.
; ஈழத்து தமிழ்ச் சிறுகதைகள் தமிழ்நாட்டு சிறுகதைகளுடன் ஒப்பிடும்போது பின்தங்கியுள்ளதென்ற கருத்தினை 1960 களில் தமிழ்நாட்டு எழுத்தாளர் பகீதரன் தெரிவித்திருந்தார். இதனை ஒத்ததாக மற்றொரு இந்திய எழுத்தாளரான ஜெயமோகன் 1990 களில் ஈழத்து சிறுகதைகள் தமிழ்நாட்டு சிறுகதைகளை விட பின்தங்கியுள்ளவெனவும் அவை ஒற்றைப் பரிமாணம் கொண்ட தட்டையானவையெனவும் குறிப்பிட்டிருந்தார்.
ஈழத்து சிறுகதைகள் சாதி, வர்க்கம், தேசிய இனப்பிரச்சினை போன்ற முக்கியமான விடயங்களையே தமது பிரதான கருப்பொருட்களாக கொண்டந்துள்ளன போதிலும் தனி மன உணர்வுகள், போன்ற நுண்ணிய விடயங்களைக் கருப்பொருளகக் கொண்டமைந்தவை மிகக் குறைவாக உள்ளனவெனக் கருதப்படுகின்றது.
இந்தப் பின்புலத்தில் உணவத்தில் பரிமாறுபவனுக்கும் அங்கு செல்லும் வாடிக்கையாளனுக்குமுள்ள மென்மையான உறவை வைத்து எழுதப்பட்ட இரண்டு சிறுகதைகளை ஒப்பிடுவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும். நுண்ணிய விடயங்களை கருப்பொருளாகக் கொள்ளும் இக்கதைகளை ஈழத்தின் பிரதான கதை கதையோட்டத்தில் இருந்து வேறுபட்டனவெனக் குறிப்பிட முடியும்.
உணவகத்தில் பரிமாறும் ஊழியர்கள்
உணவுகங்களில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறும் ஊழியர்கள் பெரும்பாலும் நாளொன்றில் அதிகாலை தொடக்கம் இரவு பத்து, பன்னிரண்டு மணிவரை வேலை செய்கிறார்கள். வாரத்தில் ஏழு நாட்களும் வேலை செய்யும் இவர்களுக்கு விடுமுறைகளும் கிடைப்பதில்லை. பண்டிகைக் காலங்களில் கூட தமது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்காது உணவகங்களிலேயே வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இவர்களுக்கு உண்டு. கடை முதலாளிகளின் ஏச்சுக்களையும் திட்டுக்களையும் அடிக்கடி வாங்கும் இவர்களால் கடைக்குவரும் வாடிக்கiயாளரின் முணுமுணுப்புக்களையும்; சகிக்க வேண்டியுள்ளது. பெரும்பாலான வாடிக்கiயாளர்கள் இந்த ஊழியர்களை மதித்து மரியாதையாக நடத்துவதில்லை. குறைந்தளவு கல்வித் தகுதியை கொண்ட இந்த ஊழியர்களின் மாதச் சம்பளமும் குறைவாகவே உள்ளது. சம்பளத்தை விட வாடிக்கையாளர் விரும்பி வழங்கும் சிறுதொகை வெகுமதியும் சில வேளைகளில் இவர்களுக்கு வருமானமாகக் கிடைக்கின்றது. மற்றைய தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு தொழிற் சங்கங்கள் இருப்பதைப் போன்று இவர்களுக்கு தொழிற்சங்கங்களும் இல்லையென்றே பொதுவாகக் கூறலாம். கொழும்பு போன்ற நகரங்களில் பெரும்பாலும் மலையகத்தைச் சேர்ந்த சிறுவர்கள், இளைஞர்களே உணவகங்களில் பரிமாறுபவர்களாக பணிபுரிகின்றனர்.
உணவகங்களில் பரிமாறும் ஊழியர்கள் தொடர்பான இலக்கியப் படைப்புக்கள்
தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவரான புதுமைப் பித்தனின் ‘இது மிஷின் யுகம்’ என்ற சிறுகதை; உணவகத்தில்; பரிமாறும் ஊழியனைப்; பற்றியது. இக்கதையில் பரிமாறுபவன்; ஒவ்வொரு வாடிக்கையாளனுக்கும் ஒரே மாதிரியாக உணவு வகைகளின் பெயர்களை ஒப்புவிக்கிறான். அவன் இயந்திரமா இல்லை மனிதனா என்ற ஐயம் பிரதான பாத்திரத்திற்கு ஏற்பட, அதனை உறுதி செய்வதற்காக பிரதான பாத்திரம் தனது கைக்குட்டையை நிலத்தில் விழ விடுகின்றது. அதனைக் கண்ட பரிமாறுபவன்“ ஸார், உங்கள் கைக்குட்டை விழுந்து விட்டது, ஸார்”; என்று கூறி அதனை எடுத்துக் கொடுக்க முயல்கிறான். இதனால் பிரதான பாத்திரம் பரிமாறுபவன்; மிஷின் இல்லை என எண்ணுகிறது.
இலங்கையில் உணவகங்களில் பரிமாறும் ஊழியர்களை முக்கிய பாத்திரங்களாகக் கொண்ட ஈழத்து இலக்கியப் படைப்புக்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. சத்தியபாரதி பதிப்பகத்தால் 1993 இல் வெளியிடப்பட்ட செ. யோகநாதனின் குறுநாவலான “சிறு பொறி பெருந்தீ,” யாழ்ப்பாணத்திலுள்ள உணவகமொன்றில் பணியாற்றும் சமையல்காரர்களும் பரிமாறுபவர்களும் இணைந்து தமது உரிமைக்காக முதலாளிக்கு எதிராக போராடுவதைப் பற்றியது.
ஈழத்து சிறுகதைகளைப் பொறுத்த வரையில் அ. யேசுராசாவின் ‘ வரவேற்பு’ , அந்தனி ஜீவாவின் ‘ புறூட் சலாட்’ சுதாராஜின் ‘ தயவு செய்து கை போடாதீர்கள்’ , பொ. கருணாகரமூர்த்தியின் ‘ பெயர் தெரியாத மனிதன்”.. போன்றன இந்த வகைக்குள் காணப்படுகின்றன. எனினும் மேலும் இந்த வகைக்குள்; சில சிறுகதைகள் கதைகள் காணப்படக் கூடும்.
அந்தனி ஜீவாவின் புறூட் சலாட் என்ற சிறுகதையானது சிரித்திரனில் வெளியானது. தெளிவத்தை ஜோசபினால் தொகுக்கப்பட்ட “மலையகச் சிறுகதைகள” என்ற தொகுப்பிலும் இச்சிறுகதை உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறுகதை உணவகமொன்றில் பரிமாறுபவனாக பணிபுரியும் சிறுவனின் அவலநிலைறைச் சித்தரிக்கின்றது. சுதாராஜின் சிறுகதையானது, உணவகமொன்றில் பரிமாறுபவன் தனது குடும்பத்தினருக்கு வடைகளை கொண்டு செல்வதற்கு பல நாள் நாட்கள் ஆசைப்படுவதையும் பல முயற்சிகளின் பின்னர் முதலாளியிடம் தனக்கு வடை வேண்டுமென்று கேட்டு வாங்கிக் கொண்டு போகிறான். அந்த வடைகளுக்கான பணம் கடை முதலாளியினால் அவனின் கணக்கில் சேர்க்கப்படுகிறது. வாசகர்களை பரிமாறுபவன் மீது அனுதாபம் கொள்ள வைக்கும் இச்சிறுகதை சிரித்திரனில் பிரசுரமானது. சுதாராஜின் முதலாவது சிறுகதைத் தொகுதியான ‘கொடுத்;தல் ‘ இலும் இது உள்ளடங்கியுள்ளது.
சில ஈழத்து சிறுகதைகளில் உணவகங்கள்pல் பரிமாறும் ஊழியர்களை பிரதான பாத்திரங்களாக அன்றி துணைப் பாத்திரங்களாக இடம் பெற்றிருக்கிறார்கள்;. உதாரணமாக தேவமுகுந்தனின் ‘ஒரு சுதந்திர நாள்..’ என்ற சிறுகதையில் உணவகமொன்றில் பரிமாறுபவர்களைப் பற்றி பிரதான பர்த்திரம் இவ்வாறு எண்ணுகின்றது: “ சங்கர், ரவி, விஜயன், சரவணன் .. என்று லக்ஸ்மி பவனில் வேலை செய்யும் மலையக இளைஞர்களை இவனறிவான். இவர்கள்தானே இரண்டு வருடங்களுக்கு மேலாய் இவனுக்கு இரவுணவு பரிமாறுகிறார்கள். வெறும் கடமைக்காய் உணவு பரிமாறாமல் நட்பாய், அன்பாய்ப் பரிமாறும் அவர்களை இவனுக்குப் பிடிக்கும்”.
இவ்வாறு உணவகங்களில் பரிமாறும் ஊழியர்களைப் பற்றிய சில கதைகள் ஈழத்தில் காணப்பட்டாலும் வசதி கருதி இந்தக் கட்டுரையானது உணவகத்தில் பரிமாறும் ஊழியனுக்கும் அங்குவரும் வாடிக்கையாளனுக்கும் இடையிலான பிணைப்புகளை வெளிக்காட்டும ;இரண்டு சிறுகதைகளான
(அ). அ. யேசுராசாவின் ‘வரவேற்பு…’
(ஆ). பொ. கருணாகரமூர்த்தியின் ‘பெயர் தெரியாத மனிதன்’
ஆகியவற்றை மட்டும் ஒப்பிட்டு நோக்க முயல்கின்றது.
இரண்டு சிறுகதைகள்
(அ). அ. யேசுராசாவின் ‘வரவேற்பு…’
ஈழத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாளர், சினிமா விமர்சகர், சஞ்சிகை ஆசிரியர்…என பலபரிமாணங்களைக் கொண்டவர் அ. யேசுராசா. இவரின் ‘வரவேற்பு…’என்ற சிறுகதை 1968 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. இக்கதை இவரின் 1974 ஆம் ஆண்டு வெளியான சிறுகதைத் தொகுதியான ‘ தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்.. ‘ இல் இடம் பெற்றுள்ளது. இக்கதை எழுத்தாளர் செ. யோகநாதனால் தொகுத்து வெளியிடப்பட்ட ஈழத்து சிறுகதைகளின் தொகுப்பான ‘ வெள்ளிப் பாதசரம’; தொகுதியிலும் சேர்க்ப்பட்டுள்ளது.
கொழும்பில் தொழில் புரியும் பிரதான பாத்திரம் விடுமுறையில் யாழ்ப்பாணம் வருகிறான். அவன் யாழ்ப்பாணத்திலுள்ள தேநீர்க்கடையொன்றில் தேநீரருந்தச் சென்றபோது முன்பு கொழும்பில் உணவகமொன்றில் பணிபுரிந்த மரியசூசை இப்போது யாழ்ப்பாணத்திலுள்ள அந்த உணவகத்தில் பணிபுரிவதைக் காண்கிறான்.
காலையில் இருந்து இரவு பத்துப் பன்னிரண்டு மணி வரை உணவகங்களில் வேலை செய்யும் மனிதர்கள் மீது இயல்பாகவே அனுதாபம் கொண்டுள்ள பிரதான பாத்திரத்திடம் மரியசூசை மரியாதையாக கதைத்து சுகம் விசாரிக்கிறான். பிரதான பாத்திரத்திற்கு உணவு பரிமாறுபவனின் தோற்றத்திலும் பழக்கத்திலும் ஒருவித பிடிப்பு உள்ளது. இருவரும் பரஸ்பரம் உரையாடுகின்றனர். மரியசூசை பிரதான பாத்திரத்தின் ‘பில்’லுக்குரிய பணத்தை செலுத்துகிறான்.
உணவு பரிமாறுபவனுக்கும் வாடிக்கையாளனுக்குமிடையிலான ஒருவித இனம்புரியாத பந்தம் இக்கதையில் வெளிப்படுகின்றது.
(ஆ). பொ. கருணாகரமூரத்தியின் ‘பெயர் தெரியாத மனிதன்’
புலம்பெயர் இலக்கியவாதிகளுள் குறிப்பிடத்தக்க முக்கியமானவராகக் கருதப்படும் பொ. கருணாகரமூர்த்தி. தற்போது ஜேர்மனியில் வசித்துவரும் இவர் சிறுகதைத் தொகுதிகள், குறுநாவல்கள் என்பவற்றை படைத்துள்ளார். இவர் எழுதிய ‘பெயர் தெரியாத மனிதன்’ என்ற சிறுகதை ‘ஞானம்’ நவம்பர் 2020 இதழில் வெளியாகியுள்ளது. இவரின் அநேகபடைப்புக்கள் புலம்பெயர் தேசங்களை களமாகக் கொண்டள்ள போதிலும் இக்கதையானது வழமைக்கு மாறாக யாழ்ப்பாணத்தைக் களமாகக் கொண்டுள்ளது.
பிரதான கதாபாத்திரமான இளைஞன், தான் பத்து வருடங்களுக்கு முன்னர் அனுராதபுரத்தில் வசித்த காலத்தில் உணவகமொன்றில் பரிமாறுபவனாக இருந்த மனிதனை எதிர்பாராத விதமாக யாழ்ப்பாண நகரத்தில் சந்திக்கிறான். அந்த பெயர் தெரியாத மனிதனுக்கு தன்னை அறிமுகம் செய்கிறான். அந்த மனிதனுக்கு பிரதான பாத்திரத்தை ஞாபகம் இல்லை. பெயர் தெரியாத மனிதனுக்கு அவனை நகரிலுள்ள சாப்பாட்டுக்கடையொன்றுக்கு அழைத்துச் சென்று அவனுடன் சேர்ந்து சிற்றுண்டிகள் உண்டு தேநீரும் அருந்துகிறான்.
அனுராதபுரத்தில் வசித்த காலகட்டத்தில் பிரதான கதாபாத்திரம் தனது சாப்பாட்டு கணக்கை குறைத்து எழுதியதை கண்ட பெயர் தெரியாத மனிதன் அதனை திருத்துமாறு கூறியுள்ளான். ஆனால் அதனை அவன் கடை முதலாளிக்கு கூறவில்லை. தனது மரியாதையைக் காத்த பெயர் தெரியாத மனிதனிடம் இந்தச் சம்பவத்தை பிரதான கதாபாத்திரம் நன்றியுணர்வுடன் கூறுகின்றது. தனது மரியாதையை முன்னர் காத்த பெயர் தெரியாத மனிதனின் மீது பிரதான பாத்திரத்திற்கு மரியாதையும் நன்றியுணர்வும் உள்ளது. ஆனால் பெயர் தெரியாத மனிதனுக்கு அந்தச் சம்பவங்கள் ஒன்றும் நினைவில்லை.
1977 இல் நடைபெற்ற இனவன்முறையால் அனுராதபுர உணவகம் எரியுண்டதையும், அதற்கு முதலே கடை முதலாளி தனது சம்பளப் பணத்தினை கொடுக்காது இழுத்தடித்தைiயும், தான் வேலையை விட்டு விட்டதையும் கதையோடு கதையாக பெயர் தெரியாத மனிதன்; பிரதான பாத்திரத்திற்கு சொல்கின்றான்.
பின்னர், தற்போது எழுவைதீவில் வசிக்கும் பெயர் தெரியாத மனிதன் தான் தொழில் தேடி யாழ்நகரத்துக்கு வந்ததாக கூறுகிறான். பிரதான பாத்திரம் பெயர் தெரியாத மனிதனுக்கு ரூபாய் இருநூயினை வழங்க முயல அவன் அதனை வாங்க மறுக்கிறான்.
ஒப்பீடு
அ. யேசுராசாவின் ‘வரவேற்பு’ என்ற சிறுகதை எழுதப்பட்டு ஏறத்தாள ஐம்பது ஆண்டுகளின் பின்னர் வெளியான சிறுகதை பொ. கருணாகரமூர்த்தியின் சிறுகதை ‘பெயர் தெரியான மனிதன்”. இந்த இரண்டு சிறுகதைகளுக்குமடையே
1) சில காலங்களுக்கு முன்னர் கடையில் உணவகங்களில் ;பபரிமாறுபவராக பணியாற்றியவரும் வாடிக்கையாராகவிருந்தவரும் சந்திக்கின்றனர்.
2) வாடிக்கையாளர் உணவக ஊழியரை மதித்தல்
3) ; வாடிக்கையாருக்கு பரிமாறுபவர் மீதான மதிப்பு இருத்தல்
4) இரண்டு கதைகளிலும் பிரதான பாத்திரங்களால் தேநீர்க்கடை ஊழியர்களை மறக்க முடியாதிருத்தல்
போன்ற சில அம்சங்களில் ஒற்றுமை காணப்படுகின்றது.
இருந்தபோதிலும் இந்த இரண்டு சிறுகதைகளும் பல தனித்துவமான அம்சங்களைக் கொண்டிருப்பதையும் வாசகனால் அவதானிக்க முடியும்
வரவேற்பு கதையில்வரும் தேநீர்க்கடை ஊழியன் பிரதான பாத்திரத்திலும் வயது குறைந்தவன். இந்த இருவரும் சில காலங்களுக்கப் பின்னர் சந்திக்கும்போது இருவருக்கும் மற்றையவரை நினைவிருக்கின்றது. ஆனால் பெயர் தெரியாத மனிதனில் வரும் தேநீர்க்கடை ஊழியன் பிரதான பாத்திரத்திலும் வயது கூடியவன். பல வருடங்களக்குப் பின்னர் இருவரும் சந்திக்கும்போது பிரதான பாத்திரத்திற்கு தேநீர்க்கடை ஊழியனை நினைவிருக்கின்றது எனினும் தேநீர்க்கடை ஊழியனுக்கு பிரதான பாத்திரத்தை நினைவில்லை.
வரவேற்பு சிறுகதையில் பிரதான பாத்திரமும் தேநீர்க்கடை ஊழியனும் ஏறத்தாள ஐந்தாறு மாதங்களுக்குப் பின்னர் மீண்டுமொரு தேநீர்க்கடையில் சந்திக்கின்றனர். ஆனால் பெயர் தெரியாத மனிதனில் வரும் பிரதான பாத்திரமும் தேநீர்க்கடை ஊழியனும் பத்தாண்டுகளுக்கு கூடுதலான காலப்பகுதியின் பின்னர் வீதியில் சந்திக்கின்றனர்.
இந்த இரண்டு கதைகளிலும் தேநீர்க்கடை ஊழியர்களின் நல்ல பண்புகள் வெளித்தெரிகின்றன. வரவேற்பு சிறுகதையில் தேநீர்க்கடை ஊழியன் பிரதான பாத்திரத்தின் சிற்றுண்டி தேநீர் என்பவற்றிக்கான ‘பில்’லைச் செலுத்துகிறான். ஆனால் மற்றைய கதையில் பிரதான பாத்திரம் உணவு ;; தேநீர், உணவுக்கான செலவை ஏற்கிறது.
வரவேற்பு கதையில் வரும் பிரதான பாத்திரத்திற்கு உணவகங்களில் வேலை செய்யும் மனிதர்கள் மீது இயல்பான அனுதாபம், உணவக ஊழியனின் தோற்றத்திலும் பழக்க வழக்கத்திலும் கொண்டுள்ள பிடிப்பு, இருவரும் ஒரே சமயத்ததை சேர்ந்தவர்கள் என்பதால் ஏற்பட்ட நெருக்ம் என்பவற்றால் இருவருக்குமிடையே இதமான உறவு ஏற்பட்டிருக்கலாம்.
ஆனால் பெயர் தெரியாத மனிதனில் வரும் பிரதான பாத்திரத்திற்கு தனது தவறை முதலாளியிடம் சொல்லிக் கொடுக்காது தனது மானத்தைக் காத்த தேநீர்க கடை ஊழியன் மீது நன்றி கலந்த மதிப்பு உள்ளது.
பெயர் தெரியாத மனிதனில் வரும் ஊழியன் மரியாதை நிமித்தம் பிரதான பாத்திரம் கொடுத்த உபசரிப்பபை ஏற்றுக் கொண்டாலும் தனது சுயமரியாதை காரணமாக பிரதான பாத்திரம் வழங்கும் பணத்தை ஏற்க மறுக்கிறான். வரவேற்பு சிறுகதையில் வரும் பிரதான பாத்திரத்திற்கு கடை ஊழியன் தனது ‘பில்’லை செலுத்தியது ஆச்சரியத்தை அளிக்கிறது. மரியாதை நிமித்தம் பிரதான பாத்திரம் அதனை ஏற்றுக் கொள்கிறது.
நிறைவுரை
ஈழத்து தமிழ்ச் சிறுகதைகள் எடுத்தாளும் வழமையான கருப்பொருட்களில் இருந்து விலகியுள்ள இந்த இரண்டு சிறுகதைகளும் மனிதர்களுக்கிடையிலான எதிர்பார்ப்பற்ற அன்பை சித்தரிக்கின்றன. வெகு நுண்மையான கருப்பொருளை எடுத்தாளும் இக்கதைகள் சிறந்த கதைகளாக அமைந்துள்ளன. பரிசாரகனுக்கும் வாடிக்கையாளனுக்குமிடையிலான வழமையான தொடர்புகளை விடவும் இவர்கள் இருவருக்குமிடையிலான அன்னியோனியத்தை இக்கதைகள் வெளிக்காட்டுகின்றனவெனலாம். வெகு சீரியாசான விடயங்களை தவிர்ந்த சாதாரண விடயங்களையும் கலைநேர்த்தியுடன் சிறுகதையாக்கலாம் என்;பதற்கு இக்கதைகள் உதாரணமெனலாம்.
Thursday, January 14, 2021
இலக்கியவாதிகள் பாத்திரங்களாகக் கொண்ட ஈழத்துச் தமிழ்ச் சிறுகதைகள்
இலக்கியவாதிகள் பாத்திரங்களாகக் கொண்ட ஈழத்துச் தமிழ்ச் சிறுகதைகள் ===================================================================
1.0 அறிமுகம்
=============
தமிழ்ச் சிறுகதைகளில் ஈழத்துச் தமிழ்ச் சிறுகதைகளுக்கு தனித்துவமான இடமுண்டு. ஈழத்துச் தமிழ்ச் சிறுகதைகள் சொல்லப்படும் முறை, கையாளும் கருப்பொருட்கள் என்பவற்றால் தமிழகச் சிறுகதைகளிலிருந்து வேறுபட்டு நிற்கின்றன.
ஆரம்பத்தில் வர்க்கம், சாதீயம் ,சீதனம் என்பவற்றைக் கருப்பொருட்களாகக் கொண்டு வெளியான பெரும்பாலான ஈழத்துச் தமிழ்ச் சிறுகதைகள் தேசிய இனப்பிரச்சினை வலுவடைந்த எழுபதுகளின் பிற்கூறின் பின்னர் போரின் அவலங்களை கருப்பொருட்களாகக் கொள்ளத் தொடங்கின. போர் நிறைவுற்ற பின்னர் எழுதப்படுகின்ற கதைகள் முடிந்த போரின் இழப்புக்களையும் மீள்குடியேற்றம் தொடர்பான விடயங்களையும் கருப்பொருளாகக் கொள்ளத் தொடங்கியுள்ளன. இவ்வாறாக ஆரம்பம் முதல் இன்றுவரை பெரும்பாலான சிறுகதைகளின் கருப்பொருட்கள் மாற்றமடைந்து வருகின்ற போதிலும் இதற்குச் சமாந்தரமாக சக இலக்கியவாதிகளை கதாபாத்திரங்களாக்கி அவர்களின் செயற்பாடுகளை கருப்பொருளாகக் கொண்டு சிறுகதை படைக்கும்போக்கு ஈழத்தில் இருந்து வருவது அவதானிக்கப்படுகின்றது.
இவ்வாறு. இலக்கியவாதிகளை பிரதான பாத்திரமாகக் கொண்டு படைக்கப்பட்ட சிறுகதைகளில் காணப்படும் புனைவு, வக்கிரம் என்பவற்றை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இலக்கியவாதிகளிடம் காணப்படும் சில குறைபாடுகளை நேரடியாகச் சுட்டிக் காட்ட முடியாதநிலை, போலிகளை அம்பலப்படுத்தல், தனிப்பட்ட பிரச்சினைக்காக சகபடைப்பாளியை அவமானப்படுத்தல், சட்டப் பிரச்சினைகளில் இருந்து தப்புதல், சில படைப்பாளிகளின் செய்கைகைளைக் காணும்போது ஏற்படும் படைப்புந்தல் போன்றன இவ்வாறான கதைகள் தோன்றக் காணரமெனலாம். உலகெங்கும் பரந்துள்ள உயிரினங்கள் படைப்பிலக்கியங்களில் கருப்பொருட்களாக அமையும்போது எழுத்தாளனை படைப்புக்களின் நாயகனாக்குவதில் தவறொன்றுமில்லை. ஆனால் உண்மையான படைப்பாளியை அவனது சொந்தப்பெயருடன் பாத்திரமாக்குவது நாகரீகமானதல்ல. இது சட்டப்பிரச்சினைக்கும் வழிசமைக்கலாம். உண்மையான படைப்பாளியை வேறுபெயரில் பாத்திரமாக்கி ஆக்க இலக்கியம் படைக்கும்போது அந்தப் படைப்பாளியை இனங்காட்டத்தக்க சில கோடிகாட்டல்கள் (பெயர், உடல் அமைப்பு, தொழில், ஊர்) படைப்புக்களில் இடம்பெறுகின்றன. இவ்வாறு கோடிகாட்டல்களுடன் படைப்பாளியைப் பற்றி சிறுகதைகள் ஆக்கும்போது அப்பாத்திரத்தின் மீதான உண்மைத்தன்மையைப் பேணுதல் அவசியமாகும். அவ்வாறில்லாதவிடத்து உண்மையான இலக்கியவாதியைப் பற்றிய தவறான புரிதல்கள் வாசகனுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.
சக இலக்கியவாதிகளை பாத்திரங்களாக்கும் பண்புகள் தமிழ் நாட்டு எழுத்தளர்களிடமும் காணப்படுவதை அவதானிக்கலாம். சுந்தர ராமசாமியின் ஜே,ஜே.: சில குறிப்புக்கள், நீல பத்மநாதனின் தேரோடும் வீதி பேன்றவற்றை இதற்கு உதாரணமாகக் காட்ட முடியும். ஈழத்துத் சிறுகதைகளைப் பொறுத்த வரையில் மூத்த முற்போக்கு எழுத்தாளர் என்.கே. ரகுநாதனினால் எழுதப்பட்ட 'நிலவிலே பேசுவோம்' சிறுகதையானது உயர்சாதிக்காரரான பெரிய மனிதர் ஒருவர் நாசூக்காக சாதியில் குறைந்தவர்கள் எனக் கருதப்படுபவர்களை வீட்டுக்குள் விடாமல் 'வெளியே நல்ல நிலவு! அத்துடன் பால் போன்ற மணல். அங்கே போய்ப் பேசிக்கொள்ளலாம்.!'
ஏன்று கூறி வெளியே அழைத்துப் போகின்றது. இக்கதையில்வரும் பெரிய மனிதர் மறைந்த பேராசிரியர் க. கைலாசபதி அவர்களென மீளமீள தமிழக மார்க்ஸிச விரோத இலக்கியவாதிகளான வெங்கட் சாமிநாதன் போன்றவர்களால் சுட்டிக் காட்டப்பட்டு வந்தது. நீண்ட இடைவெளியின் பின்னர் என், கே. ரகுநாதன் அக்கதை பேராசிரியர் கைலாசபதியைப் பற்றியது அல்ல என பேட்டியொன்றில் தெரிவித்து இச்சச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
இந்தப் பின்னணியில் சிறுகதையொன்று எழுதப்படும் நோக்கம் அது புனைவா அல்லது வக்கிரமா என்பதைத் தீர்மானிக்கின்றது. இலக்கியவாதி ஒருவரில் காணப்படும் முரணை அல்லது நூதனத்தன்மையை கலைத்துவத்துடன் சிறுகதையாக்கும்போது அது புனைவாகின்றது. மாறாக இலக்கியவாதியொரவரை வேண்டுமென்று அவமானப்படுத்தவதற்காக பொய்களும் குரோதமும் வக்கிர சந்தோச நாட்டத்தையும் அடிப்படை நோக்கமாகக் கொண்டு ஆக்கப்படும் படைப்புக்கள் வக்கிரம் நிறைந்தவையெனலாம். சிறுகதையினை வாசிக்கும் போது குறித்தபாத்திரம் இலக்கியவாதியென நினைவுக்கு வந்தாலும் நேரடியாக அப்பாத்திரத்தினை இலக்கியவாதியெனக் கதையில் குறிப்பிடப்படாதவிடத்து அக்கதை ஆய்வுக்கு சேர்த்துக் கொள்ளப்படவில்லை. உதாரணம்: எஸ். பொ.வின் வீ தொகுதியில் இடம்பெறும் அணி என்ற சிறுகதை.
இலக்கியவாதிகளை பிரதான பாத்திரமாகக் கொள்ளாது துணைப்பாத்திரங்களாகக் கொண்ட கதைகளும் இவ் ஆய்வில் எடுத்தக் கொள்ளப்படவில்லை. உதாரணம் கலைமுகம் 52 ஆவது இதழில் (2011) வெளியான தேவமுகுந்தனின் இவன் என்ற சிறுகதையில் இடம்பெறும் கவிஞர் இணுவை இன்பன், க. முரளீதரனின் பாவ மன்னிப்பு (மல்லிகை, ஏப்ரல் 2012) சிறுகதையில் வரும் சுவஸ்திகன் ஆகியோர் துணைப பாத்திரங்களாகவே கதைகளில் உலாவுலதால்; இக்கதைகள் இங்கு தவிர்க்கப்படுகின்றன.
இலக்கியவாதிகளை பிரதான பாத்திரங்களாகக் கொண்ட பல தமிழ்ச் சிறுகதைகள் ஈழத்தில் எழுதப்பட்டள்ளன. அவற்றின் எண்ணிக்கை சுமார் ஐம்பதாக இருக்கலாம் எனக் கருதப்;படுகின்றது. இவ்ஐம்பது கதைகளையும் இங்கு ஆராய்வது சாத்தியமற்றது. எனவே மாதிரிக்காக பத்துக் கதைகள் (20 சதவீதம்) மட்டுமே எழுமாறாக (Random) எடுக்கப்பட்டுள்ளன
. 2.0 பகுப்பாய்வும் விளக்கமும்
==========================
ஆய்வின் வசதிகருதி இலக்கியவாதிகளை பாத்திரமாக்கி எழுதப்பட்டள்ள சிறுகதைகளை பின்வருமாறு வகைப்படத்தலாம்: 1. தனியொரு இலக்கியவாதி மட்டும் பாத்திரமாக்கப்பட்டுள்ள சிறுகதைகள் 2. ஒன்றுக்கு மேற்பட்ட இலக்கியவாதிகளை பாத்திரங்களாக்கப்பட்டுள்ள சிறுகதைகள்.
2.1 தனியொரு இலக்கியவாதி மட்டும் பாத்திரமாக்கப்பட்டுள்ள சிறுகதைகள்
=======================================================================
இந்தப் பிரிவினுள்ளே குந்தவையின் யோகம் இருக்கின்றது, உமா வரதராஜனின் வெருட்டி, அஷ்ரப் சிஹாப்தீனின் இரண்டாம் யாசீர் அரபாத், க.பரணீதரனின் விட்டு விடுதலையாகி நிற்பாய் , செ. யோகநாதனின் மூன்றாவது பக்கம்ஆகிய கதைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
அ. குந்தவையினால் எழுதப்பட்ட யோகம் இருக்கின்றது என்ற சிறுகதை அவரது சிறுகதைத் தொகுப்பின் தலைப்புக் கதையாக இடம்பெற்றுள்ளது. ஊழல் புரியும் முற்போக்கு எழுத்தாளரொருவர் இக்கதையின் நாயகன். உதவி அரசங்க அதிபரான எழுத்தாளன் இலஞ்சம் வாங்கிப் பிடிபட்டு பணியில் இருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்ட காலகட்டத்தில் வீதியால் திரிய வெட்கப்படுகிறான். கண்ணில் தட்டப்படும் மனிதர்கள் யாவரும் தன்னைக் கிண்டல் செய்வாக எண்ணி மனம் புளுங்குகின்றான். இறுதியில் வழியில் சந்திக்கும் எழுத்தாளனது அரசியல் செல்வாக்கு மிக்க நண்பனொருவன் அமைச்சரைப் பிடித்தது மீண்டும் வேலை எடுக்கலாமெனக் கூறி நம்பிக்கையூட்டுகிறான். 'எள்ளல் மிகுந்த நடையில் எழுதப்பட்ட கதை' இதுவென எஸ். பொ. நூலின் முன்னீட்டில் இக்கதையைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். எழுத்தாளரின் பெயர் கதையில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் கதையின் தலைப்பு, பாத்திரம் பயணிக்கும் வீதியின் பெயர், கல்வி கற்ற பாடசாலை என்பன வாசகர்களுக்கு பாத்திரத்தினை இனங்காண வழிசமைக்கின்றன. முற்போக்கு பேசி நடைமுறையில் அதற்கு எதிராக இலஞ்சம், ஊழல், மோசடி என வாழும் முரண்-எழுத்தாளனைப் பற்றிய புனைவு இங்கே இலக்கியத் தரமுள்ள சிறுகதையாகின்றது.
ஆ. ஈழத்தின் சிறந்த சிறுகதைப்படைப்பாளில் ஒருவரான உமா வரதராஜனால் எழுதப்பட்ட வெருட்டி என்ற சிறுகதை 1996 ஆம் ஆண்டு மூன்றாவது மனிதன் இதழில் வெளியாகி காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட உமா வரதராஜன் கதைகள் (2011) தொகுப்பில் உள்ளடக்கப்பட்டள்ளது. தன்னை ஒரு அதிமேதாவியாகக் கருதும் எழுத்தாளரைப் பற்றிய கதை இது. இக்கதாபாத்திரத்திற்கு தான் காணும் கலைப்படைப்புக்கள் அனைத்தும் வேறு ஒருவருடையதை பிரதி செய்யப்பட்டதென்ற ஐயம் உள்ளது. இறுதியில் பாத்திரம் மனோதத்துவ வைத்தியரிடம் செல்கின்றது. வைத்தியர் அவரை தியானம் செய்யுமாறு கூறுவகிறார். உமா வரதராஜன் இக்கதையை கிண்டல் மிக்க நடையில் எழுதியுள்ளார். தன்னை ஏனையோர் உயர்வாக கருதவேண்டுமென்பதற்காக மற்றவர்களின் படைப்புக்களை மட்டந்தட்டி அவற்றை பிரதி செய்யப்பட்டவை எனக்கூறி இழிவுபடுத்தும் இப்பாத்திரத்தை உண்மையானதா இல்லைப் புனைவா என்பதை ஊகிப்பது கடினமாகவே உள்ளது. ஆனால் இலங்கையின் தென் கிழக்குப் பகுதியில் வாழ்வோரால் இக்கதாபாத்திரம் யாரென இனம்காண முடியலாம். கதை சொல்லும் பாணியில் சிறப்பானதாக இக்கதை திகழ்கின்றது.
இ. அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய இரண்டாம் யாஸீர் அரபாத் என்ற சிறுகதை 2011 ஆம் ஆண்டு தினக்குரலில் வெளியானது. சர்வதேச எழுத்தாளர் மாநாடு (2011) இணை ஒட்டி டென்மார்க் ஜீவகுமாரனினால் தொகுக்கப்பட்ட முகங்கள் தொகுதியிலும் இக்கதை இடம்பெற்றுள்ளது. இக்கதையில் வரும் எழுத்தாளன் தன்னை பெரியவனாகக் காட்ட முயற்சி செய்கிறார். இறுதியில் அவர் தன் உயிருக்கு ஆபத்து எனக் காட்ட சான்றுகள் தயாரித்து மேலை நாடென்றில் புகலிடம் தேடுகின்றார். இக்கதையும் உமா வரதராஜனின் வெருட்டி போன்றே கிண்டல்மிகு நடையில் எழுதப்பட்டுள்ளது. இக்கதையில் எழுத்தாளனின் போலிவாழ்வு அம்பலப்படுகின்றது. இக்கதையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் யாவும் உண்மையானவையா இல்லை கற்பனையானவையா என்பது ஐயத்திற்கு உரியது. முஸ்லீம் எழுத்தாளன், சஞ்சிகை நடத்தியவர், தற்போது புலம்பெயர்ந்திருப்பவர் போன்ற தகவல்கள் வாசகர்களுக்கு இப்பாத்திரத்தினை இனங்காட்ட துணைபுரியலாம்
.
ஈ. க. பரணீதரன் எழுதிய விட்டு விடுதலையாகி நிற்பாய் .என்ற சிறுகதை ஜீவநதியில் இதழ் 21) வெளியாகி பின்பு மீண்டும் துளிர்ப்போம் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. பல பெண்களுடன் தகாத தொடர்புகளை வைத்துள்ள எழுத்தாளரொருவர் அதனைத் தட்டிக் கேட்கும் மனைவியை வீட்டை விட்டுத் துரத்துகின்றார். அவளை நடத்தை கெட்டவள் எனக் கூறுகின்றார். மனைவி அவரை விட்டு விட்டுவெளிநாட்டுக்குச் செல்ல ஆயத்தமாகின்றார். இக் கதையைப் பற்றி டொக்டர் எம், கே.முருகானந்தன் பாலியல் பிறழ்வுகளும் வக்கிரங்களும் கொண்ட ஒருவனின் மனைவியாக வாழ்வதின் துன்பத்தை 'விடுதலையாகி நிற்பாய்' பேசுகிறது. பெண்ணியம் இழையோடுகிறது. அவனது செயற்பாடுகள் உளவியல் பிரச்சனையின் வெளிப்பாடு என்பதைச் சுட்டிக் காட்டுவதுடன், உள ஆற்றுப்படுத்தல் அதிலிருந்து மீள உதவும் என்கிறது. 'எனக்கு விசர் எண்டு சொல்லுறியோ' இது தனது தன்மானம் பாதிக்கப்பட்ட அந்த ஒற்றைக் கணவனின் எதிர்வினைத் தனிக்குரல் என்று மட்டும் என்னால் கொள்ள முடியவில்லை. மனநோய்கள், உள ஆற்றுப்படுத்தல் போன்றவை பற்றி இன்னும் தவறானக் எண்ணக் கருக் கொண்ட எமது சமூக பண்பாட்டுத் தளத்தின் குரலாகவே ஒலிக்கிறது எனக் குறிப்பிடுகின்றார்.
இப்பாத்திரம் உண்மையான ஒருவரை வைத்து எழுதப்பட்டதா இல்லை முற்றிலும் கற்பனையான பாத்திரமா எனத் தீர்மானிப்பது கடினமாக உள்ளது. இப்பாத்திரம் ஒரு சமுர்த்தி உத்தியோகத்தர் என்ற தரவானது வாசகர்களுக்கு பாத்திரத்தினை உய்த்தறிய வகை செய்யலாம்.
உ.) மல்லிகை செப்ரெம்பர்(2000) இதழில் முற்போக்கு எழுத்தாளர் செ.யோகநாதன் மூன்றாவது பக்கம் என்ற சிறுகதையை எழுதியுள்ளார். இக்கதையில் மக்களை ஏமாறும் பயண முகவரொருவர் சத்தியமூர்த்தியின் மகனாக இலக்கிய விமர்சகர் பரசுராமன் வருகின்றார். பரசுராமன் படைப்புக்களை விமர்சியாது படைப்பாளிகளின் தோற்றம், அந்தரங்க விடயங்கள் என்பவற்றை விமர்சிக்கிறார். பணய முகவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர் பயணமுகவருடன் கைகலப்பில் ஈடுபட தனது தந்தைக்காக அந்த மனிதரை இலக்கிய விமர்சகர் பரசுராமன் தாக்குகின்றார். அடிவாங்கிய கோபத்தில் ஏமாந்த மனிதர் 'மொட்டைக்கடிதம்'அனுப்ப விமர்சகர் கைதாகின்றார்.
.இக் கைது விடயம் ஊடகங்களில் பரபரப்படைய விமர்சகர் விடுதலையாகி செல்வாக்கால் வெளிநாடொன்றின் பல்கலைக் கழகத்திற்கு செல்கின்றார். ஏமாந்த மனிதரும் அவருக்கு நகையை அடகுவைத்து பணம் கொடுத்த அவரின் சகோதரியும் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஏமாற்றுக்காரின் மகனான இலக்கிய விமர்சகரினதும நடத்தையை இங்கு கதையாக்கப்பட்டுள்ளது. சொந்தப் பிரச்சினைக்காக கைதாகி விடுதலையாகும் விமர்சகன் அந்தக் கைது விடயத்தை அரசியலாக்கி இலாபந்தேடி வெளிநாடு செல்லும் நுட்பம் கதையில் நையாண்டியாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. இக்கதை இலகுவான நடையில் சொல்லப்பட்டுள்ளது. கதையில் வரும்பாத்திரத்தை இனங்காண்பது கடினமாகவேயுள்ளது. எனினும் சில சம்பவங்கள் நினைவுள்ளவர்களுக்கு சிலவேளைகளில் பாத்திரத்தை இனங்காணச் துணைபுரியலாம் மேலே கூறப்பட்ட ஐந்து சிறுகதைகளிலும் இலக்கியவாதிகள் பாத்திரங்களாக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் உண்மையான பெயர் கதைகளில் கையாளப்படவில்லை. ஆனால் சில பாத்திரங்கள் உண்மையான இலக்கியவாதிகளை மையமாக வைத்தே புனையப்பட்டவை என்பதை வாசகனால் ஊகிக்கமுடியும். இச்சம்பவங்கள் உண்மையானவையாக அல்லது புனைவுகளாக அமையலாம். ஆனால் இங்கு சிறுகதைகளில் எடுத்தாளப்பட்ட விடயங்களை வைத்து கதைகளை புனைவதில் படைப்பாளிகள் வெற்றி கண்டுள்ளனர்.
2.2 ஒன்றுக்கு மேற்பட்ட இலக்கியவாதிகளை பாத்திரங்களாக்கப்பட்டுள்ள சிறுகதைகள்.
====================================================================
இப்பிரிவினுள்ளேஎன்.கே.ரகுநாதன் எழுதிய பஜகோவிந்தம், வெடியரசன் எழுதிய சின்ன மாமா, சண்முகம் சிவலிங்கம் எழுதிய திசை மாற்றம் த.மலர்ச்செல்வன் எழுதிய மனக்கால், இராகவன் எழுதிய யேசுகாவியம் ஆகிய கதைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அ. மூத்த முற்போக்கு எழுத்தாளர் என். கே.ரகுநாதன் கார்த்தி நேசன் என்ற புனைபெயரில் யாழ்ப்பாணத்தில் 1989-1990 காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான திசை (மார்ச்1990) இல் பஜகோவிந்தம் என்ற சிறுகதையைப் படைத்துள்ளார். எழுத்தாளர் ஒருவர் சொத்துக்கு ஆசைப்பட்டு ஆண்மை அற்ற ஒருவருக்கு தனது மகளை திருமணம் செய்த வைக்கின்றார். இந்த திருமணத்தின்; வரவேற்புபசாரத்தில் பங்குகொள்வதா இல்லையா என்ற மனப்போராட்டத்தில் பேராசிரியர் ஒருவர் குழப்பமடைந்து பின்னர் எழுத்தாளர் தன்னைப் பற்றிக் கூட்டங்களில் இழிவாகப் பேசக்கூடும் என்ற பயத்தினால் கலந்து கொள்கிறார். பேராசிரியரின் நினைவுகளினூடாக இக்கதை நகர்கின்றது. எழுத்தாளர் பாத்திரத்தினை தொழிலதிபர் எனவும் அவரது நாவல்களில்; நயினார் பாத்திரங்கள் வருகின்றன எனவும் குறிப்பிடுவது புகழ்பெற்ற தலித் எழுத்தாளர் எனப்படும் எழுத்தாளரொருவரை வாசகர்களுக்கு நினைவூட்டலாம். மேலும் இக்கதையில் வரும் பின்வரும் பகுதி மேலும் சில எழுத்தாளர்களை வாசகர்களுக்கு இவ்வாறு அறிமுகப்படுத்துகின்றது: 'டூப் மாஸ்ரர் பட்டம் பெற்ற இலக்கியக் கொம்பனைக் கண்டதும் பேராசிரியருக்கு பெரும் ஆச்சரியம். காலம் முழுவதும் தருணபாவணனின் பரமவிரோதி,இளமைக்கால காதல் விளையாட்டுக்கள் கதைகள் எழுதி கோடேறி வழக்கும் ஆடியவர், திடீரென்று இப்போது கொஞ்ச நாட்களாக நண்பர், நண்பர ;என்று குத்தி முறிகின்றார்.இந்த மர்மம் பேராசிரியருக்குப் விளங்கவில்லை. ...முகமுடிகளை கழற்றி வைத்து விட்டு சிறிது நேரம் பேசித் சுகிப்போம் அழைப்பு விடுத்து காமக்தைகள் பேசி, மன விசாரங்கள் தீர்த்த ஒன்று கூடல்நிகழ்ச்சி நடத்தியவரும் இவர்தான் நீலநிர்வாகத்தில் மாடிவீடும் பச்சை நிர்வாகத்தில் மனையாட்டிக்கு பதவியுயர்வும் பெற்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய புத்திரச் செல்வத்தை கருங்காலியாக வேலைசெய்யவிட்டு, பின்னர் நிரந்தரமாக வேலை பெற வங்கி நிர்வாகத்திற்கு பந்தம் பிடித்த பகட்டு எழுத்தாளர் அவர்அருகில். எழுத்தை விமர்சியுங்கள்,எழுத்தாளனை விமர்சியாதீர்கள், மற்றப்படி எழுத்தாளனை விமர்சிப்பவனை ஒதுக்கித் தள்ளுங்கள் என பகிரங்க வே;டுகோள் விடுத்த பரிகார எழுத்தாளர் இன்னொருபுறம். நல்ல கதை எழத ஒருபோதும் துணியான்!' என்று தருணபாவணன் தூக்க வீச, இலக்கிய கெடுமுடி' என்று அவரைப் புகழ்ந்து எழுத பின்னர் தருணபாவணன் தனது வாரிசாக அறிவித்த எழுத்தாளர் இன்னொருபுறம் இன்னும் சப்புகள், சருகுகள், திண்டுகள் முண்டுகள்...கம்புகள், என்று பலர்.
இக்கதையில் குறித்த ஓர் எழுத்தாளரின் பலவீனமான நடத்தை கலாபூர்வமாகக் கதையாக்கப்ப்டுள்ளது. இக்கதையைப் பற்றி த. அஜந்தகுமார் 'முற்போக்கு எழுத்தாளரொருவர் சொத்துக்கு ஆசைப்பட்டு ஆண்மையற்ற ஒருவனுக்கு தன்மகளைக் கட்டிக் கொடுத்த வக்கற்ற தன்மையை இக்கதை கடுமையாக விமர்சிர்க்கிறது. அப்போது இலக்கிய உலகில் பிரபலமாயிருந்த பலரின் முகத்திரை கிழிக்கப்படுவதைக் காணலாம்' என 'தனித்துத் தெரியும் திசை' (2009)என்னும் ஆய்வு நூலில் குறிப்பிடகின்றார்.
ஆ. வெடியரசன் எழுதிய 'சின்ன மாமா' என்ற சிறுகதை கனடாவிலிருந்து வெளியாகும் காலம் (2009) சஞ்சிகையில் வெளியானது. முற்போக்கு அணியைச் சேர்ந்த, ஊழல் மோசடிகளால் பதவி நீக்கம் செய்யப்பட்டு பின்னர் தமிழ் நாட்டில் வாழ்ந்து பின்னர் நாடு திரும்பி மறைந்த விட்ட பிரபல எழுத்தாளரொருவரை இக்கதை சித்தரிக்கின்றது. எழுத்தாளரின் சகோதரியின் மகன் எழுத்தாளரின் அஞ்சலிக் கூட்டத்தில் இருந்து தனது நினைவுகளை மீட்டுவதாக கதைப்பின்னல் அமைந்துள்ளது. இக்கதையில் பிரபல எழுத்தாளர் கடல்கொண்டான், எழுத்தாளரும் சஞ்சிகை ஆசிரியருமான பத்மநாதன், மூத்த எழுத்தாளர் டேவிட் சின்னையா ஆகிய பாத்திரங்களும் வருகின்றன. சாதி ஒழிப்பு, சமவுடமை எனப்பேசியும் எழுதியும் வரும் இலக்கியவாதியொருவரிடம் இவற்றுக்கெதிரான அம்சங்கள் மிகுந்திருப்பதை கலைத்துவத்துடன் சித்தரிக்கும் இச்சிறுகதையைப்கதையைப் பற்றி பேராசிரியர் எம். ஏ. நுஃமான், இவ்வாறு கூறுகிறார்: சாதியில் தன்னைவிட உயர்ந்த ஒருத்தியைக் காதலித்துத் திருமணம் செய்தபின் தன் குடும்பத்தை முற்றிலும் புறக்கணித்த ஒரு பிரபல எழுத்தாளரைப் பற்றியது கதை. ஒரு எழுத்தாளனின் போலி வாழ்க்கையை அம்பலப்படுத்துவது என்பதற்குமேல் சொல்லும் முறையில் கதை சிறப்பாக அமைந்துள்ளது.
இ. ஈழத்து இலக்கிய உலகில் தனது பெயர்களின் முதல் எழுத்தக்களால் சசி என அழைக்கப்படுபவர் சமீபத்தில் மறைந்த இலக்கியவாதி சண்முகம் சிவலிங்கம். இவரால் எழுதப்பட்ட திசை மாற்றம் என்னும் சிறுகதை மூன்றாவது மனிதன் இதழில் (ஒக்டோபர்-டிசம்பர் 2001)வெளியானது. 1975 ஆம் ஆண்டு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு எழுத்தாளர் மாநாட்டை மையமாக வைத்து எழுதப்பட்ட இக்கதையில் சசி, உமா, நீர்வை, காவலூர், குப்பிழான் ஐ.சண்முகன், யேசுராசா ஆகிய நிஜமான இலக்கியவாதிகளின் பெயர்களுடன் உண்மையான பெயர்களை சற்றுமாற்றி எழுதப்பட்ட பேராசிரியர் வைகுந்தன், அவரது மனைவி சகலகலாவல்லி, நோமன், நரேம்ஜி, மல்லிகை நேசன், முதுகீரன் என்ற பெயர்களும் இடம் பெற்றுள்ளன. இப்பெயர்களை பரீட்சயமுள்ள வாசகர்கள் இலகுவாக இனங்காண்பர். தமிழ் மக்களின் தேசிய பிரச்சினை தொடர்பாக அன்று முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடந்த கொண்ட முறையை இக்கதைசாடுகின்றது.இம்மாநாட்டின் மேடையில் சண்முகம் சிவலிங்கம் (சசி) மாநாட்டின் நோக்கத்தில் காணப்பட்ட குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி கவிதையை வாசித்தாரென எழுத்தாளர் உமா வரதராஜன் கடந்த ஆண்டு (2011) தீராநதிக்கு அளித்த பேட்டில் தெரிவித்திருந்தார். இக் கூற்றுக்கும் சசி என்னும் பாத்திரம் சொல்வதற்கும் தொடர்புள்ளது. இதனை சசி என்ற பாத்திரம் இவ்வாறு சொல்கின்றது. '... நீங்கள்தான் நீங்கள் ஒவ்வொருவருந்தான், அந்தக் கவிதையை எழுதும்படி என்னைத் தூண்டினீர்கள். வடக்குக் கிழக்கில் உள்ளவர்கள் தங்கள் சனநாயக உரிமைகளைக் கேட்டால் அது வகுப்பு வாதம். தெற்கில் உள்ள இனத்துவேஷத்துக்குப் பெயர் தேசியம். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இந்த தீக்கோழித்தனந்தான்-இந்த ஒற்றைக்கண் நெல்சனின் பார்வைதான் என்னை அந்தக் கவிதை எழுதத் தூண்டியது...' உண்மைச் சம்பவத்தை தரமான சிறுகதையாக சசி படைத்துள்ளார். இக்கதையில் எவரையும் தனிப்பட்ட ரீதியில் சாடாமல் அவர்களின் மரசியலை விமர்சிக்கின்றது.
ஈ. பிரான்ஸில் இருந்த வெளியாகும் உயிர் நிழலில் த.மலர்ச்செல்லன் மனக்கால் என்ற சிறுகதையை எழுதியுள்ளார். இக்கதையில் உண்மைப் பெயர்களுடன் நந்தினி சேவியர், சு.வில்வரெத்தினம் ஆகியஇலக்கியவாதிகளுடன் AK என்ற கற்பனை பெயருடன் இலக்கியவாதியொருவரும் இடம்பெறுகின்றனர். சிறுகதை ஆசிரியர் த.மலர்சசெல்வன் தன்னை 'செல்வன்'; என்ற பாத்திரமாககியுள்ளார் என்பது விளங்குகின்றது. 2005 ஆம் ஆண்டுக்கான வடக்கு கிழக்கு மாகாண இலக்கிய விழாவில் 'தனித்தத் திரிதல்' என்னும் கவிதை நூலுக்கு பரிசு வழங்கப்படாது தடுக்கப்பட்டது தவறென கதை கூறுகின்றது. நந்தினி சேவியரும் AK யும் சேர்ந்து அதனை நிறுத்தியதாகவும் பின்னர் முறையீட்டின் பின்னர் செல்வனுக்கு பரிசு வழங்கப்பட்டதாகவும் கதை புனையப்பட்டுள்ளது. பின்நவீனத்துவப் பாணியில் எழுதப்பட்டள்ள இக்கதையில் இரண்டு கடிதங்களும் இடம்பெற்றுள்ளன. இக்கதை வெளியானதன் பின்னர் வெளியான உயிர் நிழலில் நந்தினி சேவியர் ஏன் பரிசு நிராகரிக்கப்பட வேண்டியது என்பதை விளக்கி ஆதாரங்களுடன் எழுதிய கடிதம் பிரசுரமாகியது.
இக்கதையில் ஒரு பாத்திரமாக அவரின் பெயர் பயன்படுத்தப்பட்ட படியால் நந்தினி சேவியரால் எதிர்வினையாற்ற முடிந்தது இங்கு கவனிக்கத்தக்கது. பொய்யான விடயங்களை மெய்யென நிருபிப்பதற்காக இவ்வாறு சிறுகதைகள் படைப்பதானது வக்கிரமாகவே தோன்றுகின்றது
. உ. இராகவன் எழுதிய யேசுகாவியம் என்ற கதை தமிழ் நாட்டிலிருந்து வெளியாகும் கணையாழி (ஏப்ரில் 2012) இதழில் வெளியானது. ஈழத்தின் முக்கிய இலக்கியவாதியொருவரின் சொந்தவாழ்வைக் கேலி செய்யும் நோக்கத்தொடு புனையப்பட்ட இக்கதையில் பாத்திரத்ததை இலகுவாக இனங்காணத்தக்கதாக பல கோடிகாட்டல்கள் இடம்பெற்றுள்ளன. இக்கதையில் பேராசிரியர் கைதி, நாபிக்கமலம், இலக்கிய விமர்சகர் அழகரட்சனா, அருணாகரன், கவிஞர் நாகநாதன், சமூகவியலாளர் வேழமுகன், சுவாமிநாதன் போன்ற இலக்கியவாதிகள்; இடம்பெறுகின்றனர். இப்பெயர்கள் உண்மையான பெயர்களை சற்றுமாற்றி அமைக்கப்பட்டவை என்பதை வாசகர்கள் உணரத்தக்கதாக இடப்பட்டுள்ளன. இக்கதையில் நூல்கள் சஞ்சிகைகள் என்பனவற்றின் பெயர்களும் இடம் பெறுகின்றன. சொறிவும் எரிவும் ஏனைய கதைகளும், சொறிதல், மறைபாதி, நாழிகை, எரிதல் ஆகிய பெயர்கள் உண்மையான நூல்களின், சஞ்சிகைகளின் பெயர்களை வாசகர்களுக்கு நினைவுபடுத்துகின்றன. இக்கதையின் நோக்கம் கிண்டல் பண்ணி இழிவுபடுத்தி சந்தோசம் காணும் மனநிலையெனலாம். மேலும் இக்கதையில் உண்மைத் தரவுகளுடன் பொய்யான தகவல்களையும் கலந்து வழங்கி எல்லாம் உண்மையென வாசகனை நம்ப வைக்கும் திட்டமிட்ட முயற்சி இடம்பெற்றுள்ளதை அவதானிக்கலாம். முற்றிலும் பொய்யான சில விடயங்களும் இக்கதையில் உள்ளடக்கப்பட்டு குறித்த பாத்திரத்தினால் குறித்துக்காட்டப்படும் இலக்கியவாதியை அவமானப்படுத்தும் நோக்கு அப்பட்டமாக வெளிப்படுகின்றது.
இக்கதை 'யாழ்ப்பாணத்தின் கரையோரக் கிராமமான பெருநகரில் வசித்து வந்த கவியரசு கண்ணதாசனின் தீவிர இரசிகரான அம்பலவாணர் யேசுகாவியத்தை வாசித்துக் கொண்டிருந்தநாளில் தமக்குப் பிறந்த குமாரனுக்கு யேசுகாவியம் எனப்பெயரிட்டார்.'என்று ஆரம்பிக்கின்றது. கண்ணதாசன் யேசுகாவியத்தைப் படைத்தது 1982 இலாகும். எனவே அம்பலவாணரின் குமாரன் பிறந்தது 1982 இல் அல்லது அதற்குப் பின்பு எனக் கொள்ளப்படல் வேண்டும். ஆனால் இக்கதையின் இன்னொரு இடத்தில் யேசுகாவியத்தின் 'சொறிவும் எரிவும் ஏனைய கதைகளும்' தொகுப்பிற்கு இலங்கை அரசு 1982 காலப்பகுதியில் சாகித்திய மண்டலப் பரிசினை வழங்கியது என வருகின்றது. இது வாசகனுக்கு குழப்பத்தினை ஏற்படுத்துகின்றது. குழந்தை பிறந்த ஆண்டில் அல்லது பிறப்பதற்கு முன்னர் எவ்வாறு சாகித்திய விருது பெற்றது? சிறுகதைகளில் இவ்வாறான குழப்பமான விடயங்கள் ஏற்படுவது சரியன்று. மேலும் இக்கதையில் கதாசிரியரின் தார்மீகச் சீரழிவும் முரண்பாடுகளும் தெளிவாக வெளித்தெரிவதை அவதானிக்க முடிகின்றது.இச்சிறுகதையில் கேலிக்குரிய விடயங்களாக எடுத்தாளப்பட்ட விடயங்கள் கேலிக்குரியவை அல்ல. உதாரணம் : 15 வயது வித்தியாசத்தில் இருவர் மனம் விரும்பிக் காதலித்தல், விலை மோசடியை சுட்டிக்காட்டுதல், நல்ல தமிழ்ச் சொற்களை உருவாக்குதல்.குறித்த ஒரு எழுத்தாளர் மீதான தனிப்பட்ட வக்கிரத்தை தீர்ப்பதற்காகவே இக்கதை(?) படைக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகின்றது.
இங்கு பகுப்பாய்வு செய்யப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட இலக்கியவாதிகளை பாத்திரங்களாக்கப்பட்டுள்ள சிறுகதைகளில் பஜகோவிந்தம், சின்ன மாமா, திசை மாற்றம் என்பவற்றில் புனைவு காணப்படவதோடு மனக்கால், யேசுகாவியம் என்பவற்றில் வக்கிரத்தன்மை மிகுந்து காணப்படுவதை கவனத்தில் கொள்ளலாம்.
சில அவதானிப்புக்கள்
====================
இங்கு எடுத்தக் கொள்ளப்பட்ட சிறுகதைகளில் ஒரு சிறுகதையைப் படைத்த எழுத்தாளர் ஒருவரைப் பற்றி வேறிருவர் சிறுகதைகள் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஒரு எழுத்தாளர் மூன்றுகதைகளில் டூப் மாஸ்ரர் பட்டம் பெற்ற இலக்கியக் கொம்பன்,டேவிட் சின்னையா, மல்லிகை நேசன் ஆகிய வௌ;வேறு பெயர்களில் துணைப்பாத்திரமாக்கப்பட்டுள்ளார்.பெண்ணெழுத்தாளர்களில் குந்தவை மட்டுமே சகஇலக்கியவாதியை பாத்திரமாக்கி சிறுகதை படைத்தள்ளார்.
முடிபு
=======
சில சம்பவங்கள் அல்லது மனிதர்களின் நடத்தைகள் சிறுகதை எழுதவதற்குரிய படைப்புந்தலை படைப்பாளிக்கு கொடுக்கலாம். ஆனால் உந்தல்கள் அனைத்தும் கலைத்துவமான சிறுகதைகலாவதில்லை. இலக்கியவாதிகளைப் பற்றிய விடயங்களை கலைத்துவமான சிறுகதைகளாகப் படைக்க முடியாதவிடத்து அவற்றை கண்டணங்களாகவோ அல்லது கட்டுரைகளாகவோ வடிப்பது பயனள்ளதாகும். குறித்த ஒரு இலக்கியவாதியென இனங்காட்டத் தக்க கோடிகாட்டல்களை கதையில் படைத்துவிட்டு அவரைப் பற்றிய பொய்யான விடயங்களை கதையில் அடக்குதல் அபத்தம். ஈழத்தில் சக எழுத்தாளர்களை பாத்திரமாக்கி புனையப்படும் சிறுகதைகள் காலத்தக்குக் காலம் வெளியாகின்றன. இத்தகைய பல கதைகள் குறித்த ஒரு விடயத்தை மையமாகக் கொண்டு கலைத்துவமாகப் படைக்கப்பட்டள்ளன. சில கதைகளில் வக்கிரத்தன்மை காணப்படுகின்றது. கலை இலக்கியமுயற்சிக்கு குரோதமும் பொய்களும் வக்கிர சந்தோச நாட்டமுமே அடிப்படையாக அமைதல் சீரழிவான தன்மையாகும். எழுத்தாளன் முதலில் அறம் சார்ந்த நிலைப்பாட்டக் கொண்டவனாக இருத்தல் வேண்டும். அப்படி இருக்கும்போதுதான் தரமான படைப்புக்கள் உருவாகும்.
(கொழும்புத் தமிழ்ச்சங்கம் நடத்திய உலகத் தமிழ் இலக்கிய மாநாடு 2012 இல் புனைகதை1 அரங்கில் 04.06.2012 அன்று வாசிக்கப்பட்ட கட்டுரையின் விரிந்த வடிவம்)
28th July 2012 முன்பு தேவமுகுந்தன் ஆல் இடுகையிடப்பட்டது
Monday, January 4, 2021
தேசிய இனப்பிரச்சினை பற்றிய இரண்டு ஈழத்து தமிழ்ச் சிறுகதைகள்
- தேசிய இனப்பிரச்சினை பற்றிய இரண்டு ஈழத்து தமிழ்ச் சிறுகதைகள்
- தேவமுகுந்தன்
தமிழ்ச் சிறுகதைகளைப் பொறுத்த வரையில் ஈழத்துக் கதைகள் தனித்துவமானவை. கையாளப்படும் கருப்பொருட்கள் மற்றும் பேச்சு மொழி, பண்பாடு சார்ந்த விடயங்கள் என்பவற்றினால் பெரும்பாலான ஈழத்து தமிழ் சிறுகதைகள் இந்திய தமிழ்ச் சிறுகதைகளில் இருந்து வேறுபடுகின்றவெனலாம். ஈழத்து தமிழ் சிறுகதைகளை பேராசிரியர் நா. வானமாமலை (1983)
“ இலங்கையில் சிறுகதை நல்ல தரமான வளர்ச்சியை முற்போக்கான திசையில் அடைந்துள்ளது என்பது என் மதிப்பீடு. பெருஞ்சுழற்சிப் பத்திரிகைகளின் இலக்கியச் சோரம் அங்கில்hதது இதற்குக் காரணமாகலாம்” என்று குறிப்பிடுகிறார். ஆரம்ப காலத்தில் எழுதப்பட்ட பெரும்பாலான ஈழத்து தமிழ்ச் சிறுகதைகள் வர்க்கம், சாதி என்பவற்றை கருப்பொருளாக கொண்டமைந்திருந்தன. எனினும் தேசிய இனப்பிரச்சினை முனைப்புப் பெற்ற பின்னர் அவை இனப்பிரச்சினையை கருப்பொருளாகக் கொள்ளத் தொடங்கின. இதனாலேயே பேராசிரியர் கா. சிவத்தம்பி (1997) ஈழத்து இலக்கியத்தைப் பொறுத்தவரையில் 1983 ஆம் ஆண்டினை பிரிகோடு எனக் குறிப்பிட்டார். அதாவது 1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் படைக்கப்பட்ட படைப்புக்களின் கருப்பொருளாக சாதி, வர்க்கம் என்பன காணப்பட 1983 ஆம் ஆண்டின் பின்னரான பெரும்பாலான ஆக்க இலக்கியங்களின் கருப்பொருளாக தேசிய இனப்பிரச்சினை கையாளப்பட்டதினை பேராசிரியர் இவ்வாறு குறிப்பிட்டாரெனலாம்.
தேசிய இனப்பிரச்சினை
இலங்கையில் சிறுபான்மை இனங்களுக்கெதிரான துன்புறுத்தல்கள் 1915, 1920 காலப் பகுதியில் ஆரம்பமானது. பின்னர் 1947 ஆம் ஆண்டில் தமிழர் தாயகங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் தமிழர்கள் தமது தனித்துவங்களை இழந்து சிங்கள மேலாதிக்கத்திற்கு கட்டுப்பட வேண்டிய நிலை தோன்றியது. மேலும் 1948 ஆம் ஆண்டு மலையகத் தமிழ் மக்களின் பிரஜா உரிமை பறிக்கப்பட்டது. இதனால் பல மலையகத் தமிழர்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர். இவற்றினைத் தொடர்ந்து 1956 ஆம் ஆண்டில் சிங்களம் மட்டும் சட்டம் அமுலாக்கப்பட்டது. இதனால் சிங்களம் தெரியாத தமிழ் அரச ஊழியர்கள் பலர் தமது தொழில்களை இழக்க நேரிட்டது. இச்சட்டத்தினைத் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு எதிராக ஏற்பட்ட இனவன்முறையில் நூற்றுக் கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். தமிழர்களால் 1961 ஆம் ஆண்டில் அமைதியான முறையில் மேற்கொள்ளப்பட்ட சத்தியாகக்கிரகப் போராட்டம் இராணுவத்தின் துணையுடன் முறியடிக்கப்பட்டது. பின்னர் பல்கலைக்கழக அனுமதிக்கு தரப்படுத்தலமுறை அறிமுகம் செய்யப்பட்டமையால், உரிய கல்வித் தகைமையைக் கொண்டிருந்தும் பல்கலைக்கழகத்திற்குத் புகும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பல தமிழ் இளைஞர்கள் விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டனர். பௌத்த சிங்களத்துக்கு முன்னுரிமையளிக்கும் அரசியல் அமைப்பு 1972 ஆம் ஆண்டில் உருவாக்கப்ட்டது. இதனால் தமிழர்கள் தம்மை இலங்கையின் இரண்டாந்தரப் குடிமக்களாக உணரும் நிலை ஏற்பட்டது. யாழ்ப்பாணத்தில் 1974 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ் ஆராய்ச்சி மாநாடு அரச படைகளால் குழப்பப்பட்டது. இக்குழப்பத்தில் பல தமிழர்கள் இறந்தனர்.
1976 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் வட்டுக்கோட்டையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சி மாநாட்டில் தனித் தமிழீழம் அமைக்கப்பட வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1977 இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் இக்கட்சி இலங்கையில் தமிழர் பெருன்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமோக வெற்றி பெற்றது. இவ்வெற்றியானது தமிழர் விடுதலைக் கூட்டணியின் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்குத் தமிழ் மக்களிடம் இருந்து கிடைத்த ஆணையாகக் கருதப்பட்டது.
1977 ஆம் ஆண்டு தமிழருக்கு எதிரான திட்டமிடப்பட்ட இனவன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையினால் தமிழர் பல நூற்றுக் கணக்கான தமிழர்கள் இறந்தனர். தமிழரின் பொருளாதாரம் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. தென்னாசியாவின் மிகப் பெரிய நூலகமாகத் திகழ்ந்த யாழ்ப்பாண பொது நூலகம் 1981 ஆம் ஆண்டு அரச படைகளால் எரியூட்டப்பட்டதுடன் யாழ்ப்பாண நகரில் பல சொத்துக்களும் அழிக்கப்பட்டன.
இத்தகைய அடக்குமுறைகளுக்கெதிராக தமிழ் இளைஞர்களால் பல இயக்கங்கங்கள் தோற்றுவிக்கப்பட்டு அரச இயந்தித்திற்கெதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 1983 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இராணுவத்துக்கெதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து 1983 ஆம் ஆண்டில் தென்னிலங்கையில் மீண்டும் தமிழ் மக்களுக்கு எதிரான பாரிய இனவன்முறை ஏற்பட்டது. இதில் பல ஆயிரக் கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் தமிழரின் பொருளாதாரம் சிதைக்கப்பட்டது. மேலும் தென்பகுதியில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வந்த பல ஆயிரக் கணக்கான தமிழ்க் குடும்பங்கள் தமது உடைமைகளை இழந்து அகதியாக வடக்கு: கிழக்கு மாகாணங்களுக்கு திரும்பினர். இது பெருமளவு தமிழ் மக்கள் இலங்கையை விட்டு புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் தஞ்சம் புக காரணமாக அமைந்தது. இன்று வெளிநாடுகளில் பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழ் மக்கள் வாழ்வதாக கருதப்படுகின்றது.
அரச அடக்குமுறைகளை தாங்காமல் பல தமிழர் இலங்கையில் இருந்து தொடர்சியாக இந்தியாவுக்கு அகதிகளான சென்று கொண்டிருந்ததனால் இந்திய மத்திய அரசு பல நெருக்கடிகளை சந்தித்தது. இதனால் 1987 ஆம் ஆண்டு; இந்திய அரசு இலங்கை அரசுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டன. இலங்கை முழுதும் மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டது. இந்திய அமைதிகாப்பு படையினர் என்ற பெயரில் இந்தியப் படைகள் இலங்கை வந்தனர். பின்னர் இந்தியப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. 1990 இல் இந்திய அமைதிப்படை தமது நாட்டுக்குதிரும்பினர். பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைப் படைகளுக்குமிடையிலான மோதல் ஆரம்பித்தது. இந்த மோதல் 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த மோதல்களால் பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதுடன் பலர் அங்கவீனமாக்கப்படனர். பல இளைஞர்கள் பல தசாப்தங்களாக சிறைகளில் வாடுகின்றனர். மேலும் இலங்கை இந்திய ஒப்பத்தனால் இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்கள் 2007 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியினரால் தொடரப்பட்ட வழக்கு ஒன்றின் மூலம் மீண்டும் பிரிக்கப்பட்டன. ஆயுதமுனையில் தமிழரின் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டாலும் அது தோற்றம் பெற்றதற்கான காரணங்கள் இன்னமும் காணப்படுகின்றன.
தேசிய இனப் பிரச்சினை தொடர்பான இலக்கியப்படைப்புகள்
“1975 இல் சுடர், அலை போன்ற சஞ்சிகைகளின் தோற்றத்தோடுதான் தேசிய இனப் பிரச்சினை இலக்கியத்தில் இடம்பெற வேண்டும் என்ற கருத்துக்கள், அழுத்தம் பெறத் தொடங்கின. 1983 இனக் கலவரத்தின் பின்னர், குறிப்பாக 1985 மத்தியின் பின்னர் மேலும் பரந்த அளவில், இது முக்கியத்துவம் பெற்றது” என அ. யேசுராசா (2007) குறிப்பிடுகிறார்
தமிழரின் இனப்பிரச்சினை தொடர்பாக இலக்கியங்கள் 1983 ஆம் ஆண்டிற்குப் பின்னரே அதிகம் உருவாகின. எனினும் மு. தளையசிங்கத்தின் ‘ ஒரு தனி வீடு’ அருளரின் ‘லங்கா ராணி’ போன்ற தேசிய இனப் பிரச்சினை தொடர்பான நாவல்கள் 1983 ஆம் ஆண்டுக்கு முன்னரே படைக்கப்பட்டன. இனப்பிரச்சினை பற்றிய சிறுகதைகளைப் பொறுத்த வரையில் அ.செ. முருகானந்தனின் ‘காளிமுத்துவின் பிரஜா உரிமை’ சாந்தனின் ‘ கிருஷ்ணன் தூது’ போன்றன 1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் எழுதப்பட்டவையாகும்.
1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெளியான பல இலக்கியப் படைப்புக்களில் தேசிய இனப்பிரச்சினை தாக்கத்தை செலுத்தியது. இது ஈழத்து தமிழ் இலக்கியத்தில் ‘போர் இலக்கியம்’ என்ற பிரிவு தோன்ற வழிசமைத்தது. மேலும் பாதகாப்பு அச்சுறுத்தலால் இலங்கையில் இருந்து வெளிப்படையாக எழுத முடியாத பல போர் அவலங்களை புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வோரால் படைக்க முடிகின்றது. புலம்பெயர்ந்து வாழ்வோரின் படைப்புகள் ‘புகலிட இலக்கியம்’ எனக் கொள்ளப்படுகின்றது. புகலிட இலக்கியத்தை ஈழத்து தமிழ் இலக்கியத்தின் நீட்சி எனக் குறிப்பிட முடியும்
இரண்டு சிறுகதைகள்
எழுத்தளர்கள் தமது பாதுகாப்புக் கருதி குறியீடுகளைப் பயன்படுத்தி சிறுகதைளைப் படைக்கும் உத்தி ஈழத்த்தில் காணப்படுகின்றது. அதாவது ஈழத்தில் வாழும் பல எழுத்தாளர்கள் தமது உயிர் அச்சுறுத்தல் கருதி இனப்பிரச்pனை தொடர்பான விடயங்களை குறியீடாகக் கையாளுகின்றனர். உமா வரதராஜனின் ‘அரசனின் வருகை’ என்ற சிறுகதையை இதற்கு சிறந்த உதாரணமாக குறிப்பிட முடியும். இந்தப் பின்புலத்தில் மிருகங்களை குறியீடாக வைத்து தேசிய இன்ப பிரச்சினையை பெரும்பான்மை இன நண்பர்களுக்கு விளக்கும் விதமாக எழுதப்பட்ட இரண்டு சிறுகதைகளை ஒப்பிடுவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும். மிருகங்ளைக் குறியீடாகக் கொண்டு ஈழத் தமிழரின் தேசிய இனப் பிரச்சினையை விளக்கும் பல கதைகள் இருந்தாலும் வசதி கருதி ஏறத்தாள ஒரே கதைப் பின்னலைக் கொண்டமைந்த
(அ). செ. யோகநாதனின் ‘சரணபாலாவின் பூனைக்குட்டி’
(ஆ). தி. ஞானசேகரனின் ‘ அல்சேஷனும் ஒரு பூனைக் குட்டியும்’
ஆகிய கதைகள் இரண்டு சிறுகதைகள் மட்டுமே இக்கட்டுரையில் ஒப்பிடப்படுகின்றன.
(அ). செ. யோகநாதனின் ‘சரணபாலாவின் பூனைக்குட்டி’
ஈழத்தின் பிரபல எழுத்தாளர் எனக் கருதப்படும் மறைந்த செ. யோகநாதனால் 1983 ஆம் ஆண்டு எழுதப்பட்ட சிறுகதை சரணபாலாவின் பூனைக்குட்டி. இது தமிழ் நாட்டு நர்மதா பதிப்பகத்தால் இவரின் 26 சிறுகதைகளை உள்ளடக்கி 1983 இல் வெளியிடப்பட்ட ‘தேடுதல்’ என்ற சிறுகதைத் தொகுதியில் 18 ஆவது கதையாக இடம் பெற்றுள்ளது.
தமிழரான பிரதான பாத்திரத்தின் நண்பன் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஜோதிபாலா. இவர்கள் இருவரும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நண்பர்களாக இருந்தவர்கள். பல்கலைக் கழகத்தில் கற்ற காலத்தில் சிறந்த கலைஞனாக விளங்கிய ஜோதிபாலா அங்கு ஒருமுறை தமிழரின் உரிமைப்போராட்டம் தொடர்பாக சிங்களப் பத்திரிகையொன்றில் திரிபுபடுத்தி வெளியான செய்தியை உண்மையெனக் கருதி பிரதான பாத்திரத்துடன் முரண்பட்டுக் கதைத்தவன.;
பல ஆண்டுகளுக்குப் பின்பு பிரதான பாத்திரத்தினை தற்செயலாக சந்திக்கும் ஜோதிபாலா கதாபாத்திரத்தினை தனது வீட்டுக்கு ஒருநாள் வருமாறு அழைக்கிறான். அவனின் அழைப்பினை ஏற்று ஜோதிபாலாவின் வீட்டுக்கு தமிழரான பிரதான பாத்திரம் செல்கிறது. ஜோதிபாலா தனது மகன் சரணபாலாவையும் மனைவியையும் பிரதான பாத்திரத்திற்கு அறிமுகம் செய்கிறான். நண்பர்கள் இருவரும் தமது பழைய நினைவுகளை அசைபோடுகின்றனர். தம்மோடு பல்கலைக்கழகத்தில் கற்ற சகாக்களைப் பற்றி உரையாடுகின்றனர். மதிய உணவுக்கு முன்னர் இருவரும் சேர்ந்து மது அருந்துகின்றனர். மதுவுடன் சேர்த்து இறைச்சித் துண்டுகளையும் உண்கின்றனர். இவர்களது உரையாடலில் இனப்பிரச்சினை பற்றிய விடயங்கள் வருகின்றன. ஜோதிபாலா தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தன்மையை ஏற்றுக்கொள்ளாது அதனைப் பற்றிக் குறைவாகக் கதைக்கிறான். பிரதான பாத்திரம் பேராட்டத்தின் நியாயத் தன்மைகளை எடுத்து விளக்க முயல்கிறது. ஆனால் ஜோதிபாலா அதனை ஏற்றுக்கொள்ளாது பல கதைகளைக் கதைக்கிறான்.
ஜோதிபாலாவின் மகனான சரணபாலா வளர்க்கும் பூனை கத்திக் கத்தி இவர்களது உரையாடலை குழப்புகின்றது. தொடர்சியான குழப்புதலால் ஆத்திரமடைந்த ஜோதிபாலா பூனையை காலால் உதைக்கிறான். இதனால் பூனை காயமடைகின்றது. தனது மகன் சரணபாலாவிடம் பூனைக் குட்டியை தூக்கிக் கொண்டு போய் அடைத்து வைக்குமாறு கூறுகிறான்.
இதற்கு சரணபாலா
“ பூனைக்குட்டிக்கு சரியான பசி, அதற்கு கொஞ்சம் சாப்பாட்டைக் வைத்திருந்தால்; அது போசாமலே கிடந்திருக்கும் அதை விட்டுவிட்டு இரக்கமில்லாமல் இப்படி தூக்கியடித்தால, அல்லது அடைத்து வைத்தால் சத்தம் போடாது நின்று விடுமா? … அது ஏன் கத்தகிறது என்று தெரிந்த பிறகும் தெரியாதது போல அதை இப்படிக் காயப்படுத்தி …. பாவம்….” என்று தனது தந்தையைப் பார்த்துக் கூறுகிறான்.
சரணபாலாவின் இந்தக் கூற்றைத்தான் தானும் ஜோதிபாலாவுக்கு கூற வேண்டுமென பிரதான பாத்திரம் எண்ணுகிறது.
(2). தி. ஞானசேகரனின் ‘ அல்சேஷனும் ஒரு பூனைக் குட்டியும்’
ஈழத்தின் மற்றொரு பிரபல எழுத்தாளராகவும் “ஞானம”; சஞ்சிகையின் ஆசிரியராகவும் இனங்காணப்படும் தி. ஞானசேகரன் அவர்களால் எழுதப்பட்டு 1996 ஆம் ஆண்டு வீரகேசரியில் வெளியான சிறுகதை ‘ அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும்’ . இக்கதை இதே பெயரில் மல்லிகைப் பந்தல் வெளியீடாக 1998 இல் வெளியான சிறுகதைத் தொகுதியில் முதலாவது கதையாக இடம்பெற்றுள்ளது. இத்தொகுதி சப்பிரகமுவ பல்கலைக் கழகத்தில் கடந்த இரு தசாப்த்தங்களுக்கு மேலாக இளமாணிப் பட்டக் கற்கைநெறியில் பாடநூலாக கொள்ளப்படுகின்றது.
மலையகத்தில் வைத்தியசாலையொன்றில் மருத்தவராகப் பணியாற்றும் யாழ்ப்பாணத்தவனாகிய சந்திரனை அவனுடன் மருத்துவக் கல்லூரியில் பயின்று தற்போது லண்டனில் நிரந்தரமாக வசிக்கும் சிங்கள நண்பன் சில்வா நீண்ட காலத்திற்குப் பின்னர் தனது குடும்பத்துடன் வந்து சந்திக்கிறான். சந்திரன் சில்வாவையும் அவனது குடும்பத்தினரையும் தனது வீட்டுக்கு மதிய உணவுக்காக அழைத்துச் செல்கிறான். சில்வாவின் மகள் கொண்டு வந்த ஓர் அல்சேஷன் நாயும் சந்திரனின் வீட்டுக்கு வருகின்றது.
சந்திரனும் சில்வாவும் சேர்ந்து மதுவருந்த அவர்களின் மனைவியர் சேர்ந்து சமையலில் ஈடுபடுகின்றனர். சந்திரனதும் சில்வாவினதும் உரையாடலில் தமது பழைய மருத்துவக் கல்லூரி நினைவுகளை மீட்கின்றனர். சில்வா தான் காதலிக்க விரும்பி, தனது காதலை நிராகரித்த தமிழ் மாணவி கவிதாவைப் ; பற்றி சந்திரனிடம் விசாரிக்கிறான். தானும்; ஒரு தமிழனாக இருந்திருந்தால் கவிதா தன்னைக் காதலித்திருப்பாள் எனச் சில்வா கவலையாகக் கூறுகிறான். இதிலிருந்து இவர்களது உரையாடல் இனப்பிரச்சினை பற்றியதாக மாறுகின்றது. சில்வா முன்பு தான் யாழ்ப்பாணம் சென்று சந்திரனின் வீட்டில் தங்கி அங்கு பெற்ற உபசாரங்களை நினைவுபடுத்துகிறான. தமிழருக்கும் சிங்களவர்களுக்குமான பழைய உறவு யுத்தத்தினால் சிதைவடைந்ததாக சில்வா கவலை கொள்கிறான். இனித்தான் பழையபடி யாழ்ப்பாணம் செல்ல முடியாதா? என சந்திரனிடம் வினவுகிறான். தனது பெற்றொர் நவாலி தேவாலய விமானக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட விடயத்தை சந்திரன் சில்வாவுக்கு கூறுகிறான். அப்போது சில்வாவின் மனைவி இந்த யுத்தத்திற்கு காரணம் தமிழ் இளைஞர்கள் தான் என்று சொல்கிறாள்.
சில்வாவின் மகள், சந்திரன் வீட்டில் இருந்த பூனைக் குட்டியை தூக்கி அணைக்கிறாள். இதனால் எரிச்சலடையும் அல்சேஷன் எரிச்சலடைந்து குரைக்கின்றது. பின்னர் அல்சேஷன் பூனையை துரத்துகின்றது. பூனை குசினிக்குள் ஓடி தஞ்சமடைகின்றது. பின்னர் இடைக்கிடையே பூனை வெளியே வந்து சில்வா கொடுக்கும் உணவுகளை உண்கிறது. அத்தருணங்களில் பூனையை அல்சேஷன் துரத்துகின்றது. அப்போதெல்லாம் பூனை குசினிக்குள் ஓடி தஞ்சமடைகின்றது. இறுதியில் பூனை குசினிக்குள் ஒரு மூலையில் மாட்டுப்பட அதனைக் கடித்துக் குதற அல்சேஷன் முயல்கின்றது. இதனால் தன்னைக் காப்பற்ற பூனை அல்சேஷனுடன் சண்டையிடுகின்றது. தனது பூனை தனது முன்னங் கால்களால் அல்சேஷனின் முகத்தில் கீறுகின்றது. இதனால் முகத்தில் காயப்பட்ட அல்சேஷன் பின்வாங்கி வந்து சில்வாவின் கால் அருகே போய்ப்படுக்கின்றது.
இந்தக் காட்சி சில்வாவின் மனைவியின் கூற்றுக்கு விடை போல அமைகின்றது.
ஒப்பீடு
; ‘சரணபாலாவின் பூனைக்குட்டி’ என்ற சிறுகதை பிரசுரமாகி 13 ஆண்டகளின் பின்னர் பிரசுரமான சிறுகதை‘ அல்சேஷனும் ஒரு பூனைக் குட்டியும்’. இந்த இரண்டு சிறுகதைகளிலும்
(1). பல்கலைக் கழகத்தில் ஒன்றாகக் கற்ற தமிழ் - சிங்கள நண்பர்கள் நீண்ட காலத்தின் பின்னர் சந்திக்கிறார்கள்;
(2). இரண்டு நண்பர்களும் மதிய உணவு உண்ண முதல் மது அருந்துகிறார்கள்
(3). அவர்களது உரையாடலில் இனப்பிரச்சினை சம்பந்தப்படுகின்றது.
(4). தமிழ் மக்களுக்கு குறியீடாக பூனை வருகின்றது;
போன்ற பல விடயங்கள் ஒத்த தன்மையாகக் காணப்படுகின்றன.
எனினும் இவ்விரு கதைகளிலும் சரணபாலாவின் பூனைக்குட்டியில் தமிழருக்கு குறியீடாக பூனை இடம் பெற அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியில் ;தமிழருக்கு குறியீடாக பூனையும் பேரினவாதத்திற்கு குறியீடாக அல்சேஷன் நாயும் இடம் பெறுகின்றன. மேலும் சரணபாலாவின் பூனைக்குட்டி கதையில்வரும் சிங்களப் பாத்திரமான ஜோதிபாலா தமிழரின் பிரச்சினையை துவேச மனப்பாங்கோடு கோபமாக பார்க்கிறான். அதேவேளை அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியிலும் வரும் சிங்களப் பாத்திரமான சில்வா இனமுரண்பாடுகள் பற்றி கவலை கொள்கிறான்.
சரணபாலாவின் பூனைக் குட்டியில், ஜோதிபாலாவின் மகனான சரணபாலா பூனைக்குட்டிக்கு சரியான பசி. அதற்கு சாப்பாடு கொடுத்தால் கத்தாது, ஏன் கத்துகின்றது என்று தெரிந்த பிறகும் அதைக் காயப்படுத்தக் கூடாது, அதனை அடைத்து வைக்கக் கூடாது என்கிறான். இது தமிழருக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதை அவர்களுக்கு கொடுத்தால் அவர்கள் போராட மாட்டார்கள. அவர்களை தாக்குவதோ சிறைகளில் அடைப்பதோ அவர்களின் பிரச்சினைக்கு தீர்வாகாது என்பதை குறியீடாகக் காட்டுகின்றது.
அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியில் ஓடுவதற்கு இடமற்று குசினியில் மாட்டுப்பட்ட பூனை தன்னைத் தாக்க முயலும் அல்சேஷனை காலால் விறாண்டி காயப்படுத்தி துரத்துகின்றது. இது தமிழருக்கு வேறு வழியில்லாததால் தமது இருப்பைப் பாதுகாக்க பேராட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதை குறியீடாகக் சொல்கின்றது. இது சத்தியாக்கிரகம் போன்ற அகிம்சைப் போராட்டங்களில்; ஆரம்பத்தில் ஈடுபட்ட தமிழர்கள் தம்மீது தொடர்சியான வன்முறைகள் பிரயோகிக்கப்பட்டதனால் வேறு வழியற்று தங்களைக் காப்பாற்ற தமது போராட்டத்தை ஆயுதப் போராட்டமாக மாற்றியமைத்ததையும் குறிப்பிடுகின்றதெனலாம்.
நிறைவுரை
ஈழத்தின் பிரபல எழுத்தாளர்கள் என்று கருதப்படும் செ.யோகநாதன், தி. ஞானசேகரன் ஆகியோரால் எழுதப்பட்ட சிறுகதைகளான சரணபாலாவின் பூனைக் குட்டி , அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் ஆகிய சிறுகதைகளில் பல ஒத்த தன்மைகள் காணப்பட்டாலும் சில தனித்துவங்களையும் அவதானிக்க முடிகின்றது. இந்த இரண்டு சிறுகதைகளும் தேசிய இனப்பிரச்சினையை குறியீடாக விளக்க முனையும் கதைகள் என்ற ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தன. செ. யோகநாதனின் சிறுகதையில் இனப்பிர்சினைக்கான காரணங்கள் விளக்கப்பட தி. ஞானசேகரனின் சிறுகதையில் தமிழ் இளைஞரகள்; ஆயுதமேந்தியதற்கான காரணங்கள் விளக்கப்படுகின்றது.
முதலாவது கதையின் பாதிப்பால் இரண்டாவது கதை எழுதப்பட்டதா அல்லது இரண்டு எழுத்தாளர்களும் ஒரே மாதிரித் சிந்தித்து எழுதினார்களோ என்பதை உறுதியாக சொல்ல முடியாதுள்ளது.
உசாத்துணைகள்
சிவத்தம்பி, கா. ( 1997, ஏப்ரல்). “கலைப்படைப்புக்களில் ஆக்கவியல்”. இலங்கைச் தமிழ் சிறுகதை இலக்கியம். தமிழ்க் கதைஞர் வட்டம் (தகவம்) திருமறைக் கiலாமன்றம் கொழும்பு இணைந்து நடத்திய இலக்கியக் கருத்தரங்கு, கொழும்பு-13
ஞானசேகரன், தி. (1998). “அல்சேஷனும் ஒரு பூனைக் குட்டியும்” அல்சேஷனும் ஒரு பூனைக் குட்டியும், மல்லிகைப் பந்தல், கொழும்பு-13
யேசுராசா, அ. (2007) “ ஈழத்து தமிழ்ச் சிறுகதைகளும் தேசிய இனப் பிரச்சினையும்” குறிப்பேட்டிலிருந்து, அலை வெளியீடு, யாழ்ப்பாணம்
யோகநாதன், செ. (1983) “சரணபாலாவின் பூனைக் குட்டி” தேடுதல், நர்மதா பதிப்பகம், சென்னை 600017
வானமலை, நா. (1983) “முன்னுரை” தேடுதல், நர்மதா பதிப்பகம், சென்னை 600017
Subscribe to:
Posts (Atom)