Sunday, October 10, 2021
மனிதர்களின் மரணத்திற்குப் பின்னர் மற்றவர்கள் நடந்து கொள்ளும் விதங்கள் பற்றிய இரண்டு ஈழத்து தமிழ்ச் சிறுகதைகள்
தமிழில் குறிப்பிடத்தக்க எழுத்தாளராகவும் விமர்சகராகவும் அறியப்படும் க. நா. சுப்பிரமணியன் அவர்கள் சிறுகதையென்பது ஒரு நிகழ்ச்சியாகவோ, உளப்போராட்டமாகவோ அமையலாம் எனக் குறிப்பிடுகிறார். மேலும் பிரபல சிறுகதை எழுத்தாளர் புதுமைப் பித்தன் சிறுகதையென்பது வாழ்வின் சாளரம் எனவும் சிறுகதையானது தொடக்கம், மையச் சம்பவம், அதன் வளர்ச்சி அல்லது வீழ்ச்சி ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டமைந்தது எனவும் குறிப்பிடுகிறார். எனினும் இந்த வரைவிலக்கணங்களுக்கு பொருந்தாத சிறுகதைகளும் காணப்படலாம்.
க. நா. சுப்பிரமணியன் அவர்கள் குறிப்பிடும் ‘சிறுகதையென்பது ஒரு நிகழ்ச்சியாக’ அமையும் பல சிறுகதைகள் ஈழத்தில் காணப்படுகின்றன. அந்த வகையில் ஒருவரின் மரணத்தின் பின்னர் மற்றவர்கள் நடந்து கொள்ளும் விதங்களை தமது கருப்பொருளாகக் கொண்டமைந்த ஈழத்து தமிழ்ச் சிறுகதைகள் சிலவற்றை நோக்குவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.
மனிதர்களின் மரணத்திற்குப் பின்னர் மற்றவர்கள் நடந்து கொள்ளும் விதங்கள் தொடர்பாக சில தமிழ்ச் சிறுகதைகள் ஈழத்தில் காணப்படுகின்றன. தாட்சாயினி, க. சட்டநாதன், தாமரைச்செல்வி, தேவமுகுந்தன், நந்தினி சேவியர், டானியல் அன்ரனி, கலைவாதி கலீல் போன்றோர் இவ்வாறான சிறுகதைகளைப் படைத்துள்ளனர். எனினும் வேறுசிலரும் இவ்வாறான கதைகளை எழுதியிருக்கக் கூடும்.
தாட்சாயினியின் ‘ ஒரு மரணமும் சில மனிதர்களும்’; என்ற சிறுகதையானது பெண் போராளி ஒருவர் இறந்ததன் பின்னர்; பாதுகாப்புக் கெடுபிடிகளால் அவரின் உறவினர்களால் தமது துக்கத்தை அழுகையாக வெளிப்படுத்த முடியாத அவலத்தைச் சித்தரிக்கின்றது. போராளியான தனது பேர்த்தி இறந்ததை அறிந்த வயோதிபமாது இராணுவத்துக்குப் பயந்து தனது அழுகையை கஸ்ரப்பட்டு அடக்க வேண்டிய நிர்ப்பந்தம் நிலவுகின்றது. சில நாட்களில் அயல் வீட்டில் நடைபெறும் வேறொரு மரணச் சடங்கிற்குச் செல்லும் அந்த வயோதிபமாது தனது பேர்த்தியை நினைத்து குழறி அழுகிறாள். இவ்வாறே அந்தப் போராளியின் சிறிய தந்தையும் அயல் வீட்டில் நடைபெறும் மரணச் சடங்கில் தனது பெறாமகளை நினைத்து அழுகிறார். யாழ்பாணத்தில் வெளியாகிய சஞ்சீவிப் பத்திரிகையில் பிரசுரமான இக்கதை 2001 ஆம் ஆண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவரால் தொகுத்து வெளியிடப்பட்ட ‘ மண்ணின் மலர்கள் என்ற தொகுப்பிலும் தாட்சாயினியின் ஒரு மரணமும் சில மனிதர்களும்’ என்ற பெயரில் அமைந்த தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் யாழ்பாண நகரமும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வன்னிப் பிரதேசமும் காணப்பட்ட இருபதாம் நூற்றான்டின் இறுதி தசாப்சத்தின் பின்னரைப் பகுதில் வடபுலத்தின் நிலமையை இச்சிறுகதை கலாபூர்வமாக பிரதிபலிக்கின்றது.
க. சட்டநாதனின் ‘ அந்த மரணமும் அவர்களும் ’; என்ற சிறுகதையானது நோயாளியான தமது மனைவி இறந்தவுடன் மனிதனொருவனின் நடத்தைகளை சித்தரிக்கின்றது. யதார்த்ததிறகு முரணான வகையில் காணப்படும் இக்கதையில் இறந்தவளின் கணவன் மனைவியின் தங்கையுடன் உடலுறவு கொள்வதாக கதை அமைகின்றது. பின்னர் அந்த மனிதன் வேறு பெண்களை தேடிச் செல்கிறான். இறுதியில் மனைவியின் மரணச் சடங்கில்தான் இனித்திருமணம் செய்யவுள்ள பெண்ணுடன் சென்று கலந்து கொள்கிறான். மல்லிகையில் (ஜனவரி, 2006) பிரசுரமான இக்கதையானது பின்னர் வெளியான சட்டநாதனின் சிறுகதைத் தொகுப்பொன்றிலும் இடம் பெற்றுள்ளது.
தாமரைச்செல்வி எழுதிய ‘அழுவதற்கு நேரமில்லை’ என்ற சிறுகதை தினக்குரல் பத்திரிகையில் 1997 இல் பிரசுரமாகி பின்னர் இதே பெயரில் 2002 ஆம் ஆண்டு வெளியான அவரது சிறுகதைத் தொகுப்பில் முதலாவது கதையாக இடம்பெற்றுள்ளது. இராணுவ நடவடிக்கைகள் காரணமாக பரந்தனை வெளியேறி கிளிநொச்சியில் உள்ள ஸ்கந்தபுரம் என்ற கிராமத்தில் குடும்பமொன்று வாழ்கின்றது. நோய், வறுமை என்பன அவர்களை பீடிக்கின்றது. இளம் குடும்பத் தலைவியான வேணி நோயால் முன்னிரவு நேரத்தில் இறக்கிறாள். இறப்புச் செய்தியை உறவினர்களிடம் சொல்லி அனுப்ப வேறு ஆட்கள் இல்லாத நிலையில் குடும்பத்தைலைவனே அதற்குச் செல்கிறான். மரணச் சடங்கினை நடத்துவதற்கு பணத்தினை நண்பனொருனிடம் கேட்டு அவனிடம் இருந்த 1000 பணத்தைக் கொண்டு வீட்டுக்குப் போனபோது தனது மகளுக்கு காய்ச்சல் அதிகமாகி விட, அவளை மருத்துவரிடம் கூட்டிச் சென்று சேலைன் ஏற்றுவிக்கிறான். அதற்கான பணத்தினை மரணச் சடங்கிற்காக கடனாகப் பெற்ற பணத்திலேயே செலுத்துகிறான். மறுநாள் பல சிரமங்களுக்கு மத்தியில் தனது மனைவியின் உடலை தகனம் செய்கிறான். அத்தினத்தில் இடம்பெறும் பாரிய செல்வீச்சுக்களால்; அவனது அயலவர்கள் பலர் இடம்பெயர அவர்களுடன் சேர்ந்து இவனது குடும்பமும் இடம்பெயர்ந்து செல்கின்றது. அகதி வாழ்வின் அவலங்களை இக்கதை படம் பிடித்துக் காட்டுகின்றது.
தேவமுகுந்தன் எழுதிய ‘கண்ணீரினூடே தெரியு; வீதி’ என்ற சிறுகதையானது 2008 ஆம் ஆண்டு தினக்குரல் பத்திரிகையிலும் பின்னர் இதே தலைப்பில் வெளியான அவரது சிறுகதைத் தொகுதியிலும் இடம்பெற்றுள்ளது. கொழும்பின் புறநகர்ப் பகுதியான கல்கிசையில் தங்கியிருக்கும் பல்கலைக்கழக மாணவனான பிரதான பாத்திரத்திற்கு வெளிநாட்டில் வசிக்கும் தந்தை போராளியான சகோதரன் இறந்த செய்தியை தொலைபேசியில் கூறுகிறார். அடுத்த நாள் அவனது வீதியில் நடைபெறவிருக்கும் இராணுவ வீரர்களின் மரணச் சடங்கிற்கு செல்ல வேண்டுமென அழுகையினூடு பிரதான பாத்திரம் எண்ணுகிறது. சிங்களவர், தமிழர் என்ற பேதமின்றி யுத்த அவலம் எல்லோர் மீதும் கவிழ்ந்திருப்பதை எவ்விதப் பாசாங்கும் இன்றி இக்கதை யாதார்த்தமாகச் சொல்கின்றதென இக்கதையைப் பற்றி பேராசியர் நுஃமான் அவர்கள் குறிப்பிடுகிறார்.
நந்தினி சேவியரின் ‘எதிர்வு’ என்ற சிறுகதையானது திருகோணமலையிலிருந்து 2003, 2004 ஆம் ஆண்டுகளில் வெளியான ‘சுட்டும் விழி’ என்ற காலாண்டு சஞ்சிகையில் 2003 ஆம் ஆண்டு முதலில் பிரசுரமாகி பின்னர் அவரது ‘ நெல்லிமரப் பள்ளிக்கூடம்’ என்ற சிறுகதைத் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. தனது மனைவியின் தந்தையின்; இறுதிச் சடங்கினை கத்தோலிக்க மத முறைப்படி நடத்துவதற்கு தாங்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்துவரும் ஊரில் பிரதான பாத்திரம் முயல்கின்றான். இதற்காக அவன் மிகுந்த பிரயத்தனப்பட்டு கருமங்களைச் செய்கின்றான். பிறந்து சில மாதங்களேயான தனது மகனுக்காக வாங்கிய நகையினை விற்று மரண வீட்டுக் கருமங்களுக்காக செலவளிக்கிறான். எனினும் யுத்த மேகம் சூழ்ந்திருந்த இக்கிராமத்திற்கு அருகே விமானக்குண்டுவீச்சு நிகழ்ந்ததால் மரணச் சடங்கை உரிய முறையில் தேவாலயத்தில் நடத்தி இறந்தவரது உடலை சவக்காலையில் அடக்கம் செய்ய முடியாத நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. இதனால் பிரதான பாத்திரம் மரண வீட்டில் எஞ்சியிருந்த மனிதர்களோடு சேர்ந்து மிகுந்த சிரமத்தின் மத்தியில் இறந்த தனது மாமனாரின் உடலை ஊரில் இருந்த சவுக்கு மரக் காட்டுக்குள் அடக்கம் செய்கிறான். பல ஆண்டுகளின் பின்னர்; “ அவன் கொமியூனிஸ்காரன் அதுதான் மாமனைச் சவுக்குமரக் காட்டக்குள்ள தாட்டுப்போட்டான்” என்று தனது உறவுகள் தன்னைப் பற்றிப் பேசிக் கொள்வதாக செய்தி அறிந்த பிரதான பாத்திரம் மனதுக்குள்ளும் வாய்விட்டும் சிரிக்கிறான். யுத்த கால அவலத்தினை இக்கதை சிறப்பாக வெளிப்படுத்துகின்றது.
டானியல் அன்ரனி ‘ஒரு வெறும் மனிதனின் மரணம்’ கலைவாதி கலீல் ‘மையித்துக்கள் துயில்கின்றன’ ஆகிய சிறுகதைகளில் மரணித்தவர்களின் உடல்களை உரிய முறையில் அடக்கம் செய்வதற்கு மத ஸ்தாபனங்களால் ஏற்படுத்தப்படும் தடைகளையும் இத்தடைகளைத் தாண்டி உடல்கள் அடக்கம் செய்யப்படுவதையும் மையமாகக் கொண்டுள்ளன.
இரண்டு சிறுகதைகள்
மனிதர்கள் இறந்ததன் பின்னர் அவர்களது உறவுகள், நண்பர்களின் நடத்தைகள் பற்றிய சில சிறுகதைகளைப் பற்றி மேலே சுருக்கமாகப் பார்த்தோம். எனினும் ஒத்த தன்மையுடைய கதைக்கருக்களை கொண்ட கதைகளான
அ. டானியல் அன்ரனியின் ‘ ஒரு வெறும் மனிதனின் மரணம்’
ஆ. கலைவாதி கலீலின் ‘மையித்துக்கள் துயில்கின்றன’
என்பவற்றை ஒப்பிடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
அ. டானியல் அன்ரனியின் ‘ ஒரு வெறும் மனிதனின் மரணம்’
யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்த டானியல் அன்ரனி தனது 47 வயதில் நோய் காரணமாக மறைந்தார். இவர் தனது சிறுகதைகளைத் தொகுத்து வலை என்ற தொகுதியை வெளியிட்டுள்ளதோடு; எட்டு இதழ்கள்வரை ‘சமர்’ என்ற சிற்றிதழினையும் வெளியிட்டுள்ளார்.
டானியல் அன்ரனியின் ‘ஒரு வெறும் மனிதனின் மரணம்’ என்ற சிறுகதையானது மல்லிகை இதழில் 1982 ஆம் ஆண்டிலும் பின்னர் 1987 இல் வெளியான இவரது ‘வலை’ தொகுதியில் இடம் பெற்றுள்ளது. கத்தோலிக்க மக்கள் வாழும் கடலோரக் கிராமத்தை பின்னணியாக கொண்டமைந்த இக்கதையில் சிறுவனான சின்னவன் பிரதான பாத்திரமாக அமைகின்றான். முன்னர் கடற்தொழில் புரிந்து பின்னர் நோயாளியாக படுத்த படுக்கையில் கிடக்கும் சின்னவனது தந்தை ஒருநாள்; இறந்து விடுகிறார். இறந்தவர் உழைத்தபோது அவரது உழைப்பில் கோவிலுக்கு தீர்வையாக செலுத்த வேண்டிய பணத்தை தினமும் கழித்த சம்மாட்டி தொம்மையார் அதனை கோவிலுக்குச் செலுத்தாதல் மரணச் சடங்கில் தேவாலயப் பங்கு சுவாமி கலந்து செய்ய வேண்டிய காரியங்களைச் செய்ய வரவில்லை. சுவாமி வர மாட்டார் என்ற தகவலை கோவில் சங்கிடுதாம் கூறுகிறார். இதனால் சுவாமி வந்து செய்ய வேண்டிய கருமங்கள் நிறைவேற்றுப்படாமல் இருக்கத்தக்கதாக மரண வீட்டில் நின்ற இளையவர்கள் சடலத்தை அடக்கம் செய்வதற்காக தூக்கிச் செல்கின்றனர்.
ஆ. கலைவாதி கலீலின் ‘மையித்துக்கள் துயில்கின்றன’
மன்னாரை பிறப்பிடமாகவும் பாணந்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட கலைவாதி கலீல் அவர்கள் எழுத்தாளர், ஓவியர், கவிஞர், ஒலிபரப்பாளர், விமர்சகர், நடிகர் என பல்பரிமாணங் கொண்டவர். இவரால் எழுதப்பட்ட சிறுகதை ‘ மையித்துக்கள் துயில்கின்றன’. யாழ்பாணத்திலிருந்து 1989, 1990 காலப்பகுதியில் வெளியான ‘திசை’ என்ற வாராந்தப் பத்திரிகை 1989 ஆம் நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசினைப் பெற்று அப்பத்திரிகையில் பிரசுரமானது.
இலங்கையின் மன்னார்ப் பிரதேசத்திலுள்ள முஸ்லிம் கிராமமான மன்னார்க்குடியிருப்பைக் களமாகக் கொண்டமைந்த சிறுகதை ‘மையித்துக்கள் துயில்கின்றன’. இக்கதையில் ஷர்மிளா என்ற யுவதி பிரதான பாத்திரமாக அமைகிறாள். தேங்காய்க கடையில் தொழில் புரிந்து கொண்டிருந்த ஷர்மிளாவின் தந்தை சகாப்தீன் திடீரென இறக்கிறார். இஸ்லாமியர்களின் முறைப்படி உடல் சூடு ஆறுவதற்கு முன்னதாக சடலத்தை அடக்கம் செய்வதற்கான அலுவல்கள் நடைபெறுகின்றன. இந்த அலுவல்கள் நிறைவுபெற்று சடலத்தை மையவாடிக்கு கொண்ட செல்வதற்காக தூக்குவதற்கு ஆயத்தமான வேளையில் ஊர் மரைக்காயர் வந்து இறந்தவர் பள்ளிவாசலுக்கு செலுத்த வேண்டிய பணத்தில் பாக்கியுள்ளதாகவும் பாக்கித் தொகையை செலுத்தமல் மையத்தை அடக்கம் செய்ய கொண்டு செல்வது ஊர் வழமைக்கு மாறானது எனக்; குறிப்பிடுகிறார். அதற்கு ஷர்மிளா எதிர்ப்புச் தெரிவித்து வாதாடுகிறாள். ஆனால் மரைக்காயர் மற்றவர்களையும் கூட்டிக் கொண்டு அந்த வீட்டில் இருந்து வெளியேறுகிறார். ஷர்மிளாவும் அவளது சகோதரிகளும் சகோதரர்களும் சேர்ந்து சடலத்தை அடக்கம் செய்வதற்கான மையவாடியை நோக்கித் தூக்கிச் செல்கின்றனர்.
ஒப்பீடு
டானியல் அன்ரனியின் ‘ ஒரு வெறும் மனிதனின் மரணம்’ என்ற சிறுகதை 1982 ஆம் ஆண்டு யூன் மாதம் வெளியான மல்லிகை இதழில் ; முதலிலும் பின்னர் 1987 ஆம் ;வெளியான அவரது சிறுகதைத் தொகுப்பிலும்; பிரசுரமானது. எனவே கலைவாதி கலீலின் ‘மையித்துக்கள் துயில்கின்றன’ என்ற கதையானது டானியல் அன்ரனியின் சிறுகதை பிரசுரிக்கப்பட்டு ஏழு வருடங்களுக்கு பின்னர் பிரசுரமான கதையாகும். இந்த இரண்டு சிறுகதைகளிலும்
1. ஏழை மனிதனொருவனின் மரணம் நிகழ்தல்
2. மதங்கள் மரண வீட்டில் தமது அதிகாரத்தை நிலைநாட்ட முனைதல்
3. மத அதிகாரத்திற்கு எதிர்க் குரலாக இளைய தலைமுறையினர் செயற்பட்டு சடலத்தை அடக்கம் செய்வதற்குப் புறப்படுதல்
4. இறந்தவர்களின் பிள்ளைகள் பிரதான பாத்திரங்களாக சித்தரிக்கப்படடிருத்தல்
போன்ற அம்சங்கள் பொதுவாகக் காணப்பட்டாலும் இந்த இருகதைகளும் தனித்துவமான அம்சங்கள் பலவற்றைக்; கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. டானியல் அன்ரனியின் ‘ ஒரு வெறும் மனிதனின் மரணம்’ என்ற சிறுகதை கத்தோலிக்க மக்களை கதாமாந்தர்களாகக் ; கொண்டமைந்தள்ளது. ஆனால் கலைவாதி கலீலின் ‘மையித்துக்கள் துயில்கின்றன’ என்ற சிறுகதையானது இஸ்லாமிய மக்களை கதாமாந்தர்களாக கொண்டமைந்துள்ளது.
இக்கதைகள் கட்டியெழுப்பப்படும் முறைமைகளில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. டானியல் அன்ரனியின் கதையின் மரணம் கதையின் நடுவில் நிகழ்கிறது. ஆனால் கலீலின் கதையின் ஆரம்பத்திலேயே மரணம் நிகழ்கின்றது.
டானியல் அன்ரனியின் கதையில்வரும் பிரதான பாத்திரமான சிறுவன் சின்னவன் விபரந்தெரியாதவனாக சித்தரிக்கப்படுகிறான். ஆனால் கலைவாதி கலீலின் கதையின் பிரதான பாத்திரம்hன ஷர்மிளா சமூகத்தின் அடக்குமுறைகளுக்கெதிராக நியாயம் கேட்கிறாள்.
டானியல் அன்ரனியின் கதையில் இறந்த மனிதனின் ஊதியத்தில் இருந்து சம்மாட்டியினால் கழிக்கப்பட்ட தொகையானது கோவிலுக்குச் செலுத்தப்படாமல் உள்ளது. ஆனால் கலைவாதி கலீலின் கதையில் இறந்த மனிதன் சகாப்த்தீன் பள்ளிவாசலுக்கு பணத்தை ஒழுங்காக கட்டவில்லை எனவுள்ளது.
டானியல் அந்தனியின் கதையில் பணம் செலுத்தாததால் கோவில் குருவானவர் சின்னவனின் தந்தையின் இறுதிக் கிரிகைகளில் பங்குகொள்ள மாட்டாரென கோவில் சங்கிடுதாம் குறிப்பிடுகிறார். ஆனால் கலைவாதி கலீலின் கதையில் மரைக்காயர் பள்ளிவாசலுக்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தாது சகாப்த்தீனின் சடலத்தை அடக்கம் செய்வது ஊர் வழக்கத்திற்கு பிழை எனவும் பணத்தை கட்டாது விட்டால் அடக்கம் செய்ய முடியாது என்கிறார்.
டானியல் அன்ரனியின் கதையில் குருவானவரை எதிர்பார்க்காமல் ஊரவர்கள் சடலத்தை சுமந்து செல்ல முயல்கிறார்கள். ஆனால் கலைவாதி கலீலின் கதையில் ஊரவர்கள் சடலத்தை தூக்காது விட இறந்தவரின் பிள்ளைகள் அதனை சுமக்க முயல்கின்றனர். அதாவது டானியல் அன்ரனியின் கதையின் சமூகத்தவர்கள் சேர்ந்து மதத்தால் ஏற்படுத்தப்படும் அடக்குமுறைக்கெதிராக செயற்பட கலைவாதி கலீலின் கதையின் இறந்தவரின் மகள் மட்டுமே நியாயம் கேட்டு தனது சகோதரங்களையும் சேர்த்துக் கொண்டு அடக்குமுறைக்கெதிராக செயற்படுகிறாள்.
இந்த இரண்டு சிறுகதைகளிலும் கலைவாதி கலீலின் கதையான மையித்துக்கள் துயில்கின்றவில் காணப்படும் கலைத்தவம், வடிவமைப்பு எனபன டானியல் அந்தனியின் கதையான ஒரு சாதாரண மனிதனின் மரணத்திலும் பார்க்க உயர்வாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
கலைவாதி கலீலின் ‘மையித்துக்கள் துயில்கின்றன’ கதை திசையில் பிரசுரமானதன் பின்னர் வளாக வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம் என்ற முகவரியில் வசித்த இரத்னா. விக்ன. ராஜ் என்பவர் வாசகர் கடிதம் பகுதியில் இக்கதையானது டானியல் அன்ரனியின் ‘ஒரு வெறும் மனிதனின் மரணம்’ என்ற சிறுகதையின் கருவினை ஒத்திருப்பதாகவும் ஒரு கதையில் கிறிஸ்தவம் மற்றைய கதையில் இஸ்லாம் உள்ளதாகவும் குறிபிட்டு இக்கதையினை பரிசுக்குத் தெரிவு செய்த நடுவர் குழுவினரை சாடியிருந்தார். அதற்கு எழுத்தாளர் க. சட்டநாதன், கலாநிதி சித்திரலேகா மௌனகுரு, திசை ஆசிரியர் மு. பொன்னம்பலம் ஆகியோரைக் கொண்டமைந்த நடுவர் குழு அளித்த விளக்கமும் திசையில் பிரசுரமாகியிருந்தது. அந்த விளக்கத்தில், இரண்டு கதைகளுக்கும் ஒத்த கருக்கள் காணப்பட்டாலும் பொதுக்கருத்துக்கள் ஒன்றாக இருக்கும் படைப்புக்களை ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுததுவதில் கட்டமைப்பு, ஆக்கமுறைமை என்பன பிரதான பங்கு வகிப்பதால் இரண்டு கதைகளுக்குமிடையிலான வேறுபாடுகளை கவனத்தில் கொண்டே கலைவாதி கலீலின் ‘மையித்துக்கள் துயில்கின்றன’ என்ற படைப்புக்கு பரிசு வழங்கியதாகக் குறிப்பிட்டிருந்தமை அவதானிக்கத்தக்கது.
நிறைவுரை
டானியல் அன்ரனி, கலைவாதி கலீல் ஆகியோரால் எழுதப்பட்ட இரண்டு சிறுகதைகளிலும் சிறுகதைகளிலும் மதங்களின் அடக்குமுறைகளை தகர்த்து இறுதி அடக்கத்துக்கு செல்லும் நிலை எடுத்தக்காட்டப்;பட்டள்ளது. இனங்கள், மதங்கள் மாறுபட்டிருந்தாலும் மனிதகுலத்திற்கு ஒத்த பிரச்சினைகள் காணப்படுவதை இவ்விரு கதைகளிலும் அவதானிக்க முடிகின்றது.
இவ்விரு சிறுகதைகளினதும் கருப்பொருட்கள் ஏறத்தாள ஒரே போன்று இருப்பினும் இவை எடுத்துரைக்கப்படும் முறைகளில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
முதலாவது கதையின் அருட்டுணர்வால்; இரண்டாவது கதை எழுதப்பட்டதா அல்லது இரண்டு எழுத்தாளர்களுக்கும் ஒத்த அனுபவங்கள் கிடைத்ததன் விளைவாக இரண்டு கதைகளிலும் பல ஒத்த அம்சங்கள் காணப்படுகின்றனவா என்பதை உறுதியாக குறிப்பிட முடியாதுள்ளது.
நன்றி ஜீவநதி (செப்டம்பர் 2021)
Subscribe to:
Posts (Atom)